Published : 14 Nov 2025 08:35 AM
Last Updated : 14 Nov 2025 08:35 AM

Bihar Election 2025 Results: மகத்தான வெற்றியுடன் மீண்டும் என்டிஏ ஆட்சி; ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி!

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 200+ தொகுதிகளை வசப்படுத்திய ஐக்கிய ஜனதா தளம் - பாஜக இணைந்த என்டிஏ மகத்தான வெற்றியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பெரும்பான்மைக்கு 122 இடங்களின் வெற்றி தேவை எனும் நிலையில், என்டிஏ பதிவு செய்திருப்பது வரலாற்று வெற்றியாக கருதப்படுகிறது. அதேவேளையில், 35 இடங்களை வெல்லவே திக்குமுக்காடிய ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸின் மகா கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் | முன்னிலை / வெற்றி நிலவரம் @ இரவு 9 மணி:
என்டிஏ - 202
மகா கூட்டணி - 35
மற்றவை - 06

கட்சி வாரியாக முன்னணி / வெற்றி நிலவரம்:
பாஜக - 89
ஜேடியு - 85
ஆர்ஜேடி - 25
காங்கிரஸ் - 6
ஜேஎஸ்பி - 0
மற்றவை - 38

பிஹாரில் வரலாற்றில் எழுதப்படக் கூடிய வெற்றியையும் நோக்கி முன்னேறி இருக்கிறது பாஜக இடம்பெற்றுள்ள என்டிஏ கூட்டணி. இதற்கு அடித்தளம் அமைத்த ‘நிமோ (நிதிஷ் - மோடி) மேஜிக்’ பற்றியும் அதனை களத்தில் சாத்தியப்படுத்திய பெண் சக்தி பற்றிய செய்திக் கட்டுரையை வாசிக்க > பிஹாரில் ஒர்க் அவுட் ஆன ‘நிமோ மேஜிக்’... தடம் தெரியாமல் போன காங். - தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

அதேவேளையில், பெரும் எதிர்பார்ப்புகளுடன் பிஹார் தேர்தலை சந்தித்த ஆர்ஜேடி - காங்கிரஸின் மகா கூட்டணிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த சறுக்கல்களுக்கு காங்கிரஸ்தான் காரணம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. அதன் விவரம் > காங்கிரஸ் ‘பேராசை’யால் கைநழுவிய வெற்றி? - பிஹார் தேர்தலில் ‘மகா’ சறுக்கல் கதை!

ஓவைசி கட்சி அசத்தல்: பிஹாரில் 25 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வென்று கவனத்தை ஈர்த்துள்ளது. சீமாஞ்சல் பகுதியில் ஓர் இடத்தில் ஆர்ஜேடி கட்சி வெல்லாதது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. முழுமையாக வாசிக்க > பிஹாரில் 5 தொகுதிகளில் வென்றது ஓவைசி கட்சி: சீமாஞ்சல் பகுதியில் ஆர்ஜேடி வாஷ் அவுட்!

பிகே கட்சி படுதோல்வி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஓர் இடத்தைக் கூட வெல்லவில்லை. தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட போதிலும் பிரசாந்த் கிஷோரின் புதிய கட்சி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. முழுமையாக வாசிக்க > பலரது வெற்றிக்கு வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோரின் கட்சி பிஹாரில் படுதோல்வி!

நிதிஷ் குமார் உறுதி: நாட்டின் வளர்ந்த மாநிலங்களின் வரிசையில் பிஹார் இடம்பெறும் என தெரிவித்துள்ள நிதிஷ் குமார், “எங்கள் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்திய வாக்காளர்கள் அனைவருக்கும் மனமார்த்த நன்றி” என்று தெரிவித்துள்ளார். முழுமையாக வாசிக்க > “வளர்ந்த மாநிலங்களின் வரிசையில் பிஹார் இடம்பெறும்” - வெற்றிக்குப் பின் நிதிஷ் குமார் உறுதி

பிரதமர் மோடி பெருமிதம்: “நல்லாட்சி வென்றுள்ளது. வளர்ச்சி வென்றுள்ளது. மக்கள் நலன் வென்றுள்ளது. சமூக நீதி வென்றுள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முழுமையாக வாசிக்க > “நல்லாட்சி, சமூக நீதிக்கு கிட்டிய வெற்றி” - மோடி பெருமிதம்

அமித் ஷா கருத்து: பிஹார் வாக்காளர்கள் அளித்துள்ள ஒவ்வொரு வாக்கும், ஊடுருவல்காரர்களுக்கு எதிரான பிரதமர் நரேந்திர மோடி அரசின் கொள்கை மீது கொண்ட நம்பிக்கையின் அடையாளம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். முழுமையாக வாசிக்க > “ஊடுருவல்காரர்களுக்கு எதிரான மோடி அரசின் கொள்கைக்கு கிடைத்ததே பிஹார் வெற்றி” - அமித் ஷா

காங்கிரஸ் ரியாக்‌ஷன்: “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும், பிஹார் மக்களுக்கும் இடையேயான நேரடிப் போட்டி” என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில், “எஸ்ஐஆர் மூலம் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கும் 65 லட்சம் பேரை நீக்கியபின் என்ன முடிவை எதிர்பார்க்க முடியும்?” என தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் கருத்து: “ஜனநாயத்தை காக்கும் அமைப்புகள் மீது பழி சுமத்திய இண்டியா கூட்டணிக்கு பிஹார் மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளார்கள்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முழுமையாக வாசிக்க > ‘ஜனநாயக அமைப்புகள் மீது பழி சுமத்தியவர்களுக்கு பாடம்’ - இபிஎஸ் கருத்து

தமிழக பாஜக ரியாக்‌ஷன்: “எவ்வித குறுக்கு வழியையும் பயன்படுத்தாமல், மக்கள் பேராதரவுடன் வெற்றிப் பாதையில் வீறு நடைபோடும் பாஜகவின் அடுத்த பயணம் தமிழகத்தை நோக்கி இருக்கும். தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தலின் மூலம் கிடைத்த எம்.பி. மற்றும் எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளில் அமர்ந்துகொண்டு, தேர்தல் ஆணையத்தின் மீதே குற்றம் சாட்டியவர்களுக்கு பதிலடி கிடைத்துள்ளது” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, “அதிகாரமளித்தல், செழிப்பு, ஒற்றுமைக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அர்ப்பணிப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது. மக்களை பிளவுபடுத்தும் முயற்சிகளை இந்த வெற்றி முறியடித்துள்ளது. குறுகிய, பிரிவினைவாத மற்றும் சந்தர்ப்பவாத அரசியலைவிட, முன்னேற்றம், நல்லாட்சி, தேசிய நலன் எப்போதும் மேலோங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்பட்டது. அந்த மாநிலத்தில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. முதல்கட்டமாக 6-ம் தேதி 121 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்டமாக 11-ம் தேதி 122 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 67.13 சதவீத வாக்குகளும் பதிவாகின. ஒட்டுமொத்தமாக 66.91 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், மகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்), ராஷ்டிரிய லோக் மோர்ச்சா, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், விஐபி, கம்யூனிஸ்ட் கட்சிகளும் உள்ளன. இதுதவிர, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கடந்த 11-ம் தேதிஇரவு வெளியாகின. இதில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று சுமார் 19 ஊடகங்கள் கணித்தன. மெகா கூட்டணிக்கு சுமார் 85 இடங்கள் கிடைக்கலாம் என்று முன்னணி ஊடகங்கள் கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x