Published : 14 Nov 2025 08:18 AM
Last Updated : 14 Nov 2025 08:18 AM
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதல் குறித்து ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) திடீர் சோதனை நடத்தியது.
பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதிகளாக மாறிய மருத்துவர்கள் குறித்து முக்கிய விசாரணைகள் நடைபெறுகின்றன. குண்டுவெடிப்புக்கு முன்பாக பரிதாபாத்தில் கைதான 3 மருத்துவர்கள் உட்பட 8 பேரிடம் விசாரணை தொடர்கிறது. இவர்களில் டாக்டர் முஜாம்மில் ஷகீலின் வாடகை வீட்டில் கைப்பற்றப்பட்ட சுமார் 3,000 கிலோ வெடி பொருட்கள் உட்பட அனைத்து ஆதாரங்களும் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவை வாங்கப்பட்ட இடமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் அம்மோனியம் நைட்ரேட்டை டாக்டர் முஜாம்மில், ஹரியானாவின் பிங்கவானில் வாங்கி உள்ளார். இதை அவருக்கு டப்பு சிங்லா எனும் உரம் மற்றும் விதை விற்பனையாளர் அதிக லாபத்துக்கு கொடுத்துள்ளார். என்ஐஏ சோதனையில் சிக்கிய சிங்லாவிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது. இதற்கிடையில், வெடிபொருட்கள் வேறு சில இடங்களிலும் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
டாக்டர் முஜாம்மில், டாக்டர் ஆதீல், டாக்டர் உமர் மற்றும் டாக்டர் ஷாஹீன் சயீத் ஆகியோர் இணைந்து தீவிரவாதத்துக்காக ரூ.20 லட்சம் ரொக்கமாகத் திரட்டியுள்ளனர். இதை அவர்களுக்கு நிதியாக அளித்தவர்கள் யார் எனவும் விசாரிக்கப்படுகிறது. இந்த பணம் டெல்லி குண்டுவெடிப்புக்கு முன்பாக டாக்டர் உமரின் பொறுப்பில் இருந்துள்ளது. இந்த தொகையில் ஹரியானாவின் குருகிராம், நுஹ் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து ரூ.3 லட்சத்துக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் வாங்கப்பட்டுள்ளது. இவற்றை ஐஇடி வெடிபொருள் தயாரிக்கும் நோக்கில் மருத்துவர்கள் வாங்கி உள்ளனர்.
அயோத்தியில் தாக்குதல்.. இவற்றை வாங்கியதில் உமர் மீது முஜாம்மிலுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதால் ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பின் தாக்குதல் திட்டம் திடீரென மாற்றப்பட்டுள்ளது.
மேலும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6-ம் தேதி, உ.பி.யின் அயோத்தியில் தாக்குதல் நடத்த சில முக்கிய இடங்கள் தேர்வாகி இருந்தன. சுமார் 8 தீவிரவாதிகள் 4 நகரங்களில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்த திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.
இவர்கள், 2 குழுக்களாக பிரிந்து கார்களிலேயே வெடிபொருட்களை எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால், உமர் - முஜாம்மில் இடையே ஏற்பட்ட மோதலால் டெல்லியில் கார் வெடித்து சிதறி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT