Published : 14 Nov 2025 07:30 AM
Last Updated : 14 Nov 2025 07:30 AM
கான்பூர்: டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கான்பூரைச் சேர்ந்த மருத்துவரைப் பிடித்து உத்தரபிரதேச மாநில போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி காரில் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய விசாரணை முகமை(என்ஐஏ) போலீஸார் பலரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி குண்டிவெடிப்புடன் தொடர்புடையதாக உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் டாக்டர் முகமது ஆரிப்பை(32) தீவிரவாத எதிர்ப்புப் படை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இவர் எம்பிபிஎஸ் படித்து முடித்த நிலையில், மருத்துவ மேல்படிப்பு(கார்டியாலஜி) படித்து வருகிறார். அவரது செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் இவருக்கும் தொடர்புடையதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். டாக்டர் முகமது ஆரிப், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்தவர். இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் ஷாஹீன் சயீதுடன் இவர் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.
மேலும் டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தபோது, டாக்டர் ஷாஹீனுடன் தொடர்பில் உள்ளவர்களுடன் டாக்டர் ஆரிப் செல்போனில் பேசி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இவர் தற்போது டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
வீட்டு மாடியில் மனித கை: டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த 4 நாட்களான நிலையில் நேற்று மனிதக் கை ஒன்று குண்டு வெடித்த இடத்தில் கிடைத்துள்ளது.
குண்டுவெடித்த இடம் அருகே உள்ள ஜெயின் கோயிலுக்கு பின்புறமுள்ள ஒரு வீட்டின் மேற்பகுதியில் இருந்து இந்த சிதிலமான கை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் அதைக் கைப்பற்றி, ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த கை யாருடையது என்பது குறித்து தடயவியல் அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT