Published : 13 Nov 2025 04:50 PM
Last Updated : 13 Nov 2025 04:50 PM
புதுடெல்லி: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு, முன்கூட்டிய நடவடிக்கை என்று கூறி விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்க உத்தரவிடக் கோரி கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், கர்நாடகாவின் இந்த கோரிக்கையை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பரிசீலிக்க தடை கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி, காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறும் செயலாகும். காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவை கடந்த 2018, பிப். 16 அன்று உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது.
காவிரி ஆறு பாயும் கீழ்ப்பகுதி மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதே காவிரி தீர்ப்பாய இறுதித் தீர்ப்பின் நோக்கமாக இருந்தது. ஆனால், தற்போது அதை மீறும் வகையில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகா முயல்கிறது. 67.16 டிஎம்சி அடி கொள்ளவு கொண்ட நீரை தேக்கும் நோக்கிலும், 400 மெகாவாட் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கிலும் ரூ. 9,000 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டத்தை கர்நாடகா செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்படுமானால், தமிழ்நாடு பெரிதும் பாதிக்கும்.” என வாதிட்டார்.
கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், “மேகேதாட்டு அணை கட்டுவதால் தமிழ்நாடு எந்த வகையிலும் பாதிக்கப்படாது. தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை வழங்குவதற்கு இத்திட்டம் தடையாக இருக்காது.” என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள திட்ட வரைவு அறிக்கை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) ஆகியவற்றின் பரிசீலனையில் மட்டுமே உள்ளது. CWMA மற்றும் CWRC ஆகியவற்றின் ஒப்புதல்களுக்குப் பிறகுதான் திட்ட வரைவு அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்று மத்திய நீர் ஆணையம் ஏற்கெனவே தெளிவுபடுத்தி உள்ளது.
திட்ட வரைவு அறிக்கை அங்கீகரிக்கப்பட்டால், தமிழ்நாடு உள்பட பாதிக்கப்பட்ட தரப்பினர் சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்க உரிமை உள்ளது. அதேநேரத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட காவிரி நீரை விடுவிக்க வேண்டிய கடமை கர்நாடக அரசுக்கு உள்ளது. தற்போதைய நிலையில், தமிழ்நாடு அரசின் மனு முன்கூட்டிய நடவடிக்கை. எனவே, இந்த மனு நிராகரிக்கப்படுகிறது.” என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT