Published : 13 Nov 2025 02:45 PM
Last Updated : 13 Nov 2025 02:45 PM
பாட்னா: வாக்கு எண்ணிக்கையின்போது அரசியலமைப்புக்கு விரோதமான நடவடிக்கைகள் நிகழ்ந்தால் அதை உறுதியுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பிஹார் சட்டப்பேரவையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் ஆர்ஜேடி கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், வாக்கு எண்ணிக்கையின்போது எத்தகைய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் நேற்று தனது கட்சியின் சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.
இதனையடுத்து இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடன் நேற்றிரவு காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினேன். இதில், வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழிகாட்டுதல்கள் குறித்தும், வாக்கு எண்ணிக்கையின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் ஆழமான ஆலோசனை நடத்தப்பட்டது.
ஜனநாயகத்தின் தாயான பிஹாரில் நீதியை விரும்பும் மக்களும், அரசியலமைப்பை நேசிக்கும் அனைத்து சமூக, அரசியல் பணியாளர்களும் மிகுந்த விழிப்புடன், எச்சரிக்கையுடன், முழு திறனுடன் உள்ளார்கள். நியாயமற்ற, அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கைகள் நிகழுமானால் அவற்றை உறுதியுடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள அனைவரும் தயாராக உள்ளனர். பிஹாரும் பிஹார் மக்களும் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற உறுதிபூண்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு: 243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளன. கடந்த 6ம் தேதி நடந்த முதற்கட்டத் தேர்தலில் 65.08% வாக்குகள் பதிவான நிலையில், 11ம் தேதி நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் 67.13% வாக்குகள் பதிவாகின. வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட தேர்தல் இது என்பதால், இத்தேர்தல் நாடு முழுவதும் மிகவும் பேசுபொருளானது.
கருத்துக்கணிப்புகள்: தேர்தல் முடிவடைந்ததையடுத்து பல்வேறு நிறுவனங்கள், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், கருத்துக்கணிப்புகள் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், பிஹார் மக்கள் மாற்றத்துக்காகவே வாக்களித்திருப்பதாகவும், மெகா கூட்டணி ஆட்சி பிஹாரில் அமையும் என்றும் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி: இந்தத் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி(ராம் விலாஸ்), இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. பாஜக 101 தொகுதிகளிலும், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளிலும், ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 28 தொகுதிகளிலும் போட்டியிட்டன. முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளிலும், உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 6 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அங்கித் குமார் என்ற சுயேட்சை ஒரு தொகுதியில் போட்டியிட்டார்.
மெகா கூட்டணி: ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ(எம்எல்), விகஷீல் இன்சான் கட்சி, சிபிஐ, சிபிஎம், இந்தியன் இன்குலுசிவ் கட்சி, ஜனசக்தி ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. ராஷ்ட்ரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, சிபிஐ(எம்எல்) 20, விகஷீல் இன்சான் கட்சி 12, சிபிஐ 9, சிபிஎம் 4, இண்டியன் இன்குலுசிவ் கட்சி 3, ஜனசக்தி ஜனதா தளம் 1, சுயேட்சைகள் 2 என மெகா கூட்டணியில் தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டன. பிரதமர் மோடி, அமித் ஷா, நிதிஷ் குமார், ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT