Last Updated : 13 Nov, 2025 01:16 PM

 

Published : 13 Nov 2025 01:16 PM
Last Updated : 13 Nov 2025 01:16 PM

டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி: காஷ்மீரில் 13 இடங்களில் உளவுப்பிரிவு போலீஸார் சோதனை

காஷ்மீரில் சோதனை நடத்தப்பட்ட இடம்

ஸ்ரீநகர்: டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக காஷ்மீரில் 13 இடங்களில் பயங்கரவாத தடுப்பு உளவுப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர்.

கடந்த 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக முதலில் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)-க்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, என்ஐஏ டைரக்டர் ஜெனரல் விஜய் சகாரே தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சரவை, இது ஒரு தீவிரவாத தாக்குதல் என அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது என பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உறுதி அளித்துள்ளனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒயிட் காலர் தீவிரவாதம் எனக் குறிப்பிடப்படும் இதில், நன்கு படித்தவர்கள், வசதியான பின்னணி கொண்டவர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர். எனினும், பாதுகாப்பு வலுவாக இருந்ததால் இவர்களால் அதை மேற்கொள்ள முடியவில்லை. எனினும், கடந்த 2008-ல் மும்பையில் நடந்த தாக்குதலை போல டெல்லியில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த இவர்கள் திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதற்கான பணியில் 8 பேர் ஈடுபட்டதாகவும், 4 இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டதாகவும், ஒவ்வொரு குண்டுவெடிப்புக்கும் இருவர் பொறுப்பேற்று செயல்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கார் குண்டுவெடிப்பை நிகழ்த்திய உமர் முகமது நபி, ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். டெல்லி குண்டுவெடிப்பில் உடல் சிதறி உயிர் இழந்தது இவர்தான் என டிஎன்ஏ சோதனை மூலம் போலீஸார் உறுதிப்படுத்தி உள்ளனர். இவரது நெருங்கிய நண்பர்களான மருத்துவர் முஜம்மில் ஷகில், மருத்துவர் அதில் அகமது ராதர் ஆகியோரை பாதுகாப்புப் படையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அளித்த தகவல்களின் பேரில் மேலும் பலரை தேடி வருகின்றனர்.

இதனிடையே, உமர் முகமது நபி மற்றும் முஜம்மில் ஷகில் ஆகியோரின் டைரிகளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். நவம்பர் 8 முதல் 12க்குள் தாக்குதலை நடத்த திட்டமிட்டது குறித்து டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதில் சுமார் 25 நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் வெடிபொருட்களை பதுக்கிவைத்திருந்த இடத்தில் இருந்து முஜம்மில் ஷகிலின் மற்றொரு டைரி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

டைரிகளில் குறியீட்டு வார்த்தைகள் உள்ளதாகவும் அவற்றை புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்புக்கு ஹூண்டாய் ஐ20 காரோடு EcoSport என்ற மற்றொர காரையும் இவர்கள் பயன்படுத்தி உள்ளனர். அதோடு, குண்டுவெடிப்புக்கு ஏற்ற வகையில் மேலும் இரண்டு வாகனங்களை வடிவமைக்கவும் இவர்கள் திட்டமிட்டிருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x