Published : 13 Nov 2025 02:34 AM
Last Updated : 13 Nov 2025 02:34 AM
சென்னை: டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடைய மருத்துவர்களின் நெட்ஒர்க் தொடர்புகள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்பட தென் மாநிலங்களில் உள்ளதா என மத்திய உளவுப் பிரிவு போலீஸார், மாநில உளவு பிரிவு போலீஸாருடன் இணைந்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
டெல்லியில் செங்கோட்டை அருகே திங்கள்கிழமை கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். முன்னதாக, பெண் மருத்துவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், பலர் தற்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவர்கள். இவர்கள் இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருந்துள்ளனர்.
பெரிய அளவில் படிக்காத இளைஞர்கள் தீவிரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, மூளைச் சலவை செய்யப்பட்டு பயங்கரவாத செயல்களில் பெரும்பாலும் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால், டெல்லி குண்டு வெடிப்பின் பின்னணியில் லட்சக்கணக்கில் சம்பளம் பெற்று வரும் மருத்துவர்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவரங்கள் சேகரிப்பு: இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள், நேரடியாக களத்தில் இறங்கியவர்கள், மூளையாக செயல்பட்டவர்கள், நிதி உதவி செய்தவர்கள், பொருளாதார உதவி மற்றும் தங்கும் இடம் உள்பட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்தவர்கள் குறித்த பட்டியலை என்ஐஏ, மத்திய உளவு, தீவிரவாத தடுப்பு என பல்வேறு பிரிவு போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், டெல்லியில் வெடிகுண்டு வெடித்த அடுத்த விநாடியே தமிழக போலீஸார் உஷார் அடைந்தனர். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள ரயில், பேருந்து, விமான நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடிய, விடிய வாகன சோதனையும் நடைபெற்றது. நகரின் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியும் முடுக்கிவிடப்பட்டது.
ஒருங்கிணைந்து கண்காணிப்பு: இதன் தொடர்ச்சியாக குண்டு வெடிப்பில் தொடர்புடைய மருத்துவர்களின் வலைப்பின்னல் தொடர்புகள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்பட தென் மாநிலங்களில் உள்ளதா என மத்திய உளவு பிரிவு போலீஸாரும் மாநில உளவு பிரிவு போலீஸாரும் ஒருங்கிணைந்து ரகசிய விசாரணை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT