Published : 13 Nov 2025 01:34 AM
Last Updated : 13 Nov 2025 01:34 AM
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 மருத்துவர்களில் 2 பேர், துருக்கியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர்களை சந்தித்து சதி ஆலோசனையில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை கார் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாயின. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ‘ஒயிட் காலர் தீவிரவாதத்தை’ முறியடிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல் துறை இணைந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கின்றன.
அதன் ஒரு பகுதியாக இந்த தாக்குதலை முன்னின்று நடத்திய மருத்துவர் உமர் முகமது நபியின் நெருங்கிய நண்பர் மருத்துவர் முஜம்மில் ஷகீல் மற்றும் மருத்துவர் ஆதில் அகமது ராதர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஹரியானாவின் பரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள், ஏகே 47 துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் போலீஸார் கைப்பற்றினர்.
மருத்துவர்களான உமர், முஜம்மில், ஆதில் ஆகிய மூவரும் பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் பல மாதங்களாக நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். இந்த அமைப்பின் முக்கிய தலைவர்களை மேற்கூறிய 3 பேரில் 2 பேர் துருக்கியில் சந்தித்து சதி ஆலோசனையில் ஈடுபட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஹுண்டாய் ஐ20 காரைத் தவிர, தீவிரவாத தாக்குதலுக்கு மேலும் 2 கார்களை அந்த மருத்துவர்கள் வாங்கியுள்ள தகவலும் வெளியாகி உள்ளது. இதுகுறித்தும் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கார் குண்டுவெடிப்பில் காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதும், அவர்கள் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், இந்த தாக்குதலில் பெண்கள் ஈடுபட்டதும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
மும்பை தாக்குதலை போல்... கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலை போன்று தீவிரவாதிகள் டெல்லியில் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
டெல்லி மையப் பகுதியில் முக்கிய அடையாளங்களாக திகழும் செங்கோட்டை, இந்தியா கேட், கான்ஸ்டிடியூஷன் கிளப், கவுரி சங்கர் கோயில் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக தெரியவந்து உள்ளது.
கடந்த 2008, நவம்பர் 26-ம் தேதி மும்பையில் தாஜ்மகால் ஓட்டல், ஓபராய் ட்ரைடென்ட் ஓட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட 12 இடங்களில் தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினர். இதுபோன்ற தாக்குதலை தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: பாகிஸ்தானை தளமாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு டெல்லியில் இந்த தாக்குதலுக்கு பல மாதங்களாக திட்டமிட்டு வந்துள்ளது. டெல்லி மட்டுமின்றி குருகிராம், ஃபரிதாபாத்தில் சில இடங்களை குறிவைத்து சக்திவாய்ந்த 200 ஐஇடி குண்டுகளை தீவிரவாதிகள் தயாரித்து வந்துள்ளனர்.
மத வழிபாட்டு தலங்களை குறிவைத்து பதற்றத்தை தூண்டுவதும் அவர்கள் திட்டம். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா, ஷோபியன், அனந்த்நாக் ஆகிய பகுதிகளை சேர்ந்த மருத்துவர்கள் இந்த சதிச் செயலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் விரைவில் பரிதாபாத்தில் தங்கள் தளத்தை நிறுவினர்.
அவர்கள் மருத்துவர்களாக இருந்ததால் சந்தேகத்துக்கு இடமின்றி டெல்லியில் எளிதாகச் செல்ல முடிந்தது. பிறகு அவர்கள் வெடிபொருட்களை சேமித்து வைக்க தவுஜ், பதேபூர் டாகா பகுதிகளில் அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
இவர்கள் முன்னதாக தீபாவளி பண்டிகையின்போது மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதனை செயல்படுத்த முடியவில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லி குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி விஜய் சகாரே நியமனம்: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) டைரக்டர் ஜெனரல் விஜய் சகாரே தலைமையில் 10 பேர் கொண்ட குழு நேற்று அமைக்கப்பட்டுள்ளது.
இவர் 1996-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் கேரளா பிரிவில் வெற்றி பெற்றவர் ஆவார். பின்னர் இவர் என்ஐஏ-வில் ஐஜியாக பணியாற்றினார். இவர் டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து விஜய் சகாரே, நாட்டின் உளவுத்துறை தலைவரை நேற்று சந்தித்து டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT