Published : 12 Nov 2025 04:10 PM
Last Updated : 12 Nov 2025 04:10 PM
பாட்னா: பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் நிராகரித்துள்ளார். ‘தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுக்கவும், ஒரு உளவியல் தாக்கத்தை உருவாக்கவும் இந்த கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன’ என்று அவர் கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேஜஸ்வி யாதவ், "எங்களுக்குக் கிடைக்கும் கருத்துக்களின்படி பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பதற்றமாகவும் அச்சத்தோடும் இருப்பது தெரிகிறது. அவர்கள் அமைதியற்று இருக்கின்றனர். அதிகபட்ச வாக்குப்பதிவு காரணமாக அவர்கள் பீதியடைந்துள்ளனர். நேற்று, வாக்குப்பதிவின் போது மக்கள் நீண்ட வரிசையில் நின்றனர். மாலை 6 முதல் 7 மணி வரை மக்கள் பொறுமையாக வாக்களிக்க காத்திருந்தனர். வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும்போதே, கருத்து கணிப்புகள் வெளிவரத் தொடங்கின.
இந்த தேர்தலில் வாக்களித்த மக்கள் எங்களுக்கு ஆதரவாகவே கருத்துகளை சொல்கின்றனர். கடந்த காலத்தில், இதுபோன்ற நேர்மறையான கருத்துகள் ஒருபோதும் வந்ததில்லை. இந்த முறை எங்களுக்கு கிடைத்த கருத்துகளின்படி, 1995 -ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் முன்னாள் ஜனதா தளத்தின் சின்னத்தில் போட்டியிட்டபோது பெற்றதை விட சிறப்பான வெற்றியை பெறுவோம். இந்த அரசாங்கத்துக்கு எதிராக அனைவரும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனர், இந்த முறை, மாற்றம் நிச்சயமாக நிகழும் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன், முடிவுகள் 14-ம் தேதி வரும், பதவியேற்பு விழா 18-ம் தேதி நடைபெறும்.
நாங்கள் தவறான நம்பிக்கையிலோ அல்லது தவறான புரிதலிலோ வாழவில்லை. தேர்தல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுக்கவும், ஒரு உளவியல் தாக்கத்தை உருவாக்கவும் இந்த கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. இந்த கருத்துக்கணிப்புகளை வெளியிட்டவர்களில் யாரிடமாவது மாதிரி அளவு பற்றி நீங்கள் கேட்டால், அவர்கள் அதனை சொல்ல மாட்டார்கள். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் அளவுகோல்கள் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.” என்று அவர் கூறினார்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலின் 2-வது கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளன. பிஹார் தேர்தல் முடிவுகள் நவம்பர் 14-ம் தேதி வெளியாகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT