Published : 12 Nov 2025 12:15 PM
Last Updated : 12 Nov 2025 12:15 PM
மைசூரு: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கோரிக்கை வைத்தார். மேலும், தேர்தல்களின் போது குண்டுவெடிப்புகள் ஏன் நிகழ்கின்றன என்றும் கேள்வியெழுப்பினார்.
மாவட்ட அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “பிஹார் தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த குண்டுவெடிப்பு நடந்தது மிகவும் கவலையளிக்கிறது. தேர்தல்களின் போது குண்டுவெடிப்புகள் ஏன் நிகழ்கின்றன?. மத்திய அரசு இந்த கேள்வி குறித்து விசாரித்து பதிலளிக்க வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது அனுதாபங்கள். உண்மையை வெளிக்கொணரவும், பாதுகாப்பு குறைபாடு இருந்ததா என்பதை சரிபார்க்கவும் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்
இதற்கிடையில், கர்நாடக மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடுமையாக விமர்சித்தார். அவர், “டெல்லி குண்டுவெடிப்புக்கு காரணமான பாதுகாப்பு குறைபாட்டிற்கு அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும். சுதந்திர இந்தியாவின் மிகவும் திறமையற்ற உள்துறை அமைச்சரான அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும். வேறு எந்த மாநிலத்திலோ அல்லது நாட்டிலோ இதுபோல நடந்திருந்தால், அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டிருப்பார்.
ஆனால் பிரதமர் மோடியின் அனைத்து ரகசியங்களையும் அறிந்திருப்பதால் அவர் முக்கியமானவராக இருக்கிறார். புல்வாமா தாக்குதல் மற்றும் மணிப்பூரில் நெருக்கடி உட்பட அமித் ஷாவின் ஆட்சிக் காலத்தில் மீண்டும் மீண்டும் பாதுகாப்பு தோல்விகள் ஏற்பட்டு வருகிறது. எல்லைகளைப் பாதுகாப்பது யாருடைய பொறுப்பு, ராகுல் காந்தியின் கடமையா அல்லது உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கடமையா?” என்று கேள்வி எழுப்பினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT