Published : 12 Nov 2025 06:26 AM
Last Updated : 12 Nov 2025 06:26 AM
பெங்களூரு: பெங்களூருவை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள தண்டனை கைதிகள் டிவி பார்த்துக்கொண்டே செல்போனில் பேசுவது போன்ற வீடியோ அண்மையில் வெளியானது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கைதிகள் மது அருந்திவிட்டு நடனம் ஆடும் வீடியோ கன்னட சேனல்களில் வெளியானது.
அந்த வீடியோவில் 10-க்கும் மேற்பட்ட கைதிகள், மது அருந்திக்கொண்டு அசைவ உணவு, பழங்கள் சாப்பிடுவது போலவும் பிறகு பாட்டு பாடி நடனம் ஆடுவது போன்ற காட்சிகளும் பதிவாகி இருந்தன. இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் ஆளும் காங்கிரஸை கடுமையாக விமர்சித்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா கூறுகையில், ‘‘கைதிகளிடம் சிறைத்துறை அதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குகின்றனர். அதன் காரணமாகவே தீவிரவாத வழக்கிலும் கொலை வழக்கிலும் கைதான குற்றவாளிகள் சிறையில் சொகுசாக இருக்கின்றனர். மது அருந்திவிட்டு நடனம் ஆடும் அளவுக்கு சிறைச்சாலை உல்லாச விடுதியாக மாறிவிட்டது. அதற்கு ஊழலில் திளைக்கும் காங்கிரஸ் அரசே முதன்மையான காரணம்’’ என குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா கூறுகையில் ‘‘சிறை முறைக்கேடுகளை ஒருபோதும் ஏற்க முடியாது. பெங்களூரு மத்திய சிறையின் தலைமை காவல் கண்காணிப்பாளராக இருந்த இமாம்சாப் மியாகேரி, உதவி காவல் கண்காணிப்பாளர் அசோக் பஜந்திரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.இந்த சிறை விதிமீறல் பற்றி விசாரிக்க சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஹிதேந்திரா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஒரு மாதத்தில் விசாரணை அறிக்கை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு நடனம் ஆடிய கைதிகள் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT