Published : 12 Nov 2025 12:42 AM
Last Updated : 12 Nov 2025 12:42 AM
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த ஷாகின். ஹரியானாவில் உள்ள அல் பலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வந்தார். அவரது காரில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. இதை யடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து ஹரியானா போலீஸார் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் ஏவுகணை தாக்குதல் மூலம் தரைமட்டமாக்கப்பட்டன. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அவர்களின் மனைவிகளை ஒன்றிணைத்து கடந்த அக்டோபரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் மகளிர் பிரிவு தொடங்கப்பட்டது. இந்த அமைப்புக்கு ஜமாத் அல் மோமினா என்று பெயரிடப்பட்டு உள்ளது. ஜெய்ஷ் அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் தங்கை சாதியா அசார், மகளிர் பிரிவின் தலைவராக உள்ளார். சாதியாவின் கணவர் யூசுப் அசார், காந்தஹார் விமான கடத்தலின் மூளையாக செயல்பட்டவர் ஆவார். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது அவர் உயிரிழந்தார்.
இதற்கு பழிவாங்க சாதியா அசார், தீவிரவாத மகளிர் பிரிவு தலைவராக பதவியேற்று இந்திய பெண்களை இணையதளம் வாயிலாக மூளைச் சலவை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாகவே ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் இந்திய மகளிர் பிரிவு தலைவராக மருத்துவர் ஷாகின் நியமிக்கப்பட்டு உள்ளார். ஷாகினோடு தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT