Published : 12 Nov 2025 12:33 AM
Last Updated : 12 Nov 2025 12:33 AM
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ரத்து செய்ய கோரி, மார்க்சிஸ்ட், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சிகள் தாக்கல் செய்த ரிட் மனுக்களுக்கு பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 27-ம் அறிவித்தது. இது அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறுவதாக உள்ளது. எனவே, எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி திமுக சார்பில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பி.சண்முகம், மனித நேய மக்கள் கட்சியின் எம்.எச்.ஜவாஹிருல்லா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.செல்வபெருந்தகை, புதுச்சேரி திமுக அமைப்பாளர் ஆர்.சிவா உள்ளிட்டோர் சார்பிலும் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து மனுக்களையும் பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்த மனுக்களுடன் இணைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்ய பக்சி அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள உள்ள நவம்பர், டிசம்பர் மாதங்கள் மழைக்காலம். பெரும்பாலான அதிகாரிகள் வெள்ள நிவாரண பணியில் இருப்பார்கள். டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் சொந்த ஊரில் மக்கள் இருக்க மாட்டார்கள்.
ஜனவரி மாதம் பொங்கல் அறுவடை என்பதாலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பொருத்தமாக இருக்காது. கிராமங்களில் இணையதள வசதி குறைவாக இருப்பதால் ஆவணங்களை பதிவேற்ற சிக்கல் உருவாகும். இவ்வாறு கபில் சிபல் வாதிட்டார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் இப்போதுதான் முதல் முறையாக செய்வது போல ஏன் நடிக்கிறீர்கள்? கள யதார்த்தம் எங்களுக்கும் தெரியும். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்தை நம்ப வேண்டும். குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டலாம் அதை தீர்க்க உதவுவோம்’’ என்றனர்.
தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி, ‘‘இந்த விவகாரத்தில் மாநிலங்கள் பின்தங்கி இருப்பதாக ஒன்றுக்கொன்று போட்டியிட்டு தெரிவிக்கின்றன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முரண்பாடான உத்தரவுகளை தவிர்க்க உயர் நீதிமன்றங்களில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.
அதிமுக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் ஆஜராகி, ‘‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஆதரித்து மனு தாக்கல் செய்துள்ளோம். தமிழகத்தில் கிராம பகுதிகளில் இணையதளம் இல்லை என திமுக கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது’’ என்று வாதிட்டார். வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், நவ. 24-ம் தேதிக்குள் அனைத்து மனுக்களுக்கும் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை நவ.26-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT