Published : 12 Nov 2025 12:22 AM
Last Updated : 12 Nov 2025 12:22 AM
புதுடெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பு சதிகாரர்களை நீதியின் முன் நிறுத்துவோம் என பூடானில் பிரதமர் நரேந்திர மோடிஉறுதிபட தெரிவித்துள்ளார்.
பூடான் அரசு சார்பில் தலைநகர் திம்பு நகரில் உலக அமைதி பிரார்த்தனை திருவிழா நடைபெற்று வருகிறது. மேலும் அந்நாட்டின் 4-வது மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக்கின் 70-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று பூடான் புறப்பட்டுச் சென்றார். உலக அமைதி பிரார்த்தனை திருவிழாவில் நேற்று பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: பூடானின் 4-வது மன்னர் வாங்சுக், பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் பூடானுக்கு மட்டுமல்ல, உலக அமைதியில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நாள். இந்தியா- பூடான் இடையிலான கலாச்சார, ஆன்மிக மற்றும் வளர்ச்சி கூட்டுறவு பல நூற்றாண்டுகள் பழமையானது. இரு நாடுகளிடையேயான உறவு தொடர்ந்து வலுப்பெறும்.
இன்று மிக கனத்த இதயத்துடன் இங்கு வந்துள்ளேன். டெல்லியில் நடைபெற்ற கொடூரமான சம்பவம் அனைவரையும் மிகவும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இன்று முழு தேசமும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அனைத்து அமைப்புகளுடனும் திங்கள்கிழமை இரவு முழுவதும் நான் தொடர்பில் இருந்தேன். எங்கள் அமைப்புகள் இந்த சதியின் அடித்தளத்தை கண்டுபிடிக்கும். இதற்குப் பின்னால் இருக்கும் சதிகாரர்களை தப்ப விடமாட்டோம். அவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, “டெல்லியில் நிகழ்ந்த கொடூரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக முன்னணி புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. அதன் விவரம் விரைவில் வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT