Published : 11 Nov 2025 09:59 PM
Last Updated : 11 Nov 2025 09:59 PM
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே திங்கட்கிழமை மாலை நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தார்களுக்கு நிவாரண உதவி அறிவித்துள்ளது டெல்லி யூனியன் பிரதேச அரசு.
“டெல்லியில் அரங்கேறிய துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஒட்டுமொத்த நகரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது. இதில் தங்களது உறவுகளை பிரிந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை டெல்லி அரசு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் காயமடைந்தவர்கள் விரைந்து குணம்பெற வேண்டும். இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக டெல்லி அரசு நிற்கும். இந்த நேரத்தில் உடனடியாக நிவாரணம் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், நிரந்தரமாக உடல் ஊனமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும். அதற்கான உறுதியை டெல்லி அரசு சார்பில் அளிக்கிறேன்.
டெல்லியில் அமைதியும், பாதுகாப்பும் தான் எங்கள் அரசின் முன்னுரிமை. அரசு நிர்வாகம் இந்த பணிகள் சார்ந்து இயங்கி வருகிறது” என டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சட்டவிரோத தடுப்புச் சட்டம் (உபா), குண்டுவெடிப்பு சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத தடுப்புச் சட்டம் பிரிவு 16 மற்றும் 18, குண்டு வெடிப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள், பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய சட்டங்களின் கீழ் டெல்லி கோட்வாலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகப்படும் நபரின் நகர்வுகள், ஃபரிதாபாத் பல்கலைக்கழகத்துடனான அவரின் தொடர்புகள், குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியவை குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT