Published : 11 Nov 2025 07:08 PM
Last Updated : 11 Nov 2025 07:08 PM
பாட்னா: பிஹாரில் பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆட்சி அமைக்க 122 இடங்களில் வெற்றி தேவை எனும் நிலையில், என்டிஏ 140+ இடங்களையும், மெகா கூட்டணி 90+ இடங்களையும் வசப்படுத்தக் கூடும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. வரும் 14-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.
243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளன. முதற்கட்டத் தேர்தலில் 65.08% வாக்குகள் பதிவான நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் மாலை 5 மணி வரை 67.14% வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு நிறைவடையும் வரை தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதால், தேர்தல் முடிவடைந்ததை அடுத்து பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
அதன்படி, தைனிக் பாஸ்கர் நடத்திய கருத்துக் கணிப்பில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 145 முதல் 160 தொகுதிகள் வரை வெல்லும் என்றும், மெகா கூட்டணி 73 தொகுதிகள் முதல் 91 தொகுதிகள் வரை வெல்லக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாட்ரிஸ் கருத்துக் கணிப்பில், என்டிஏ 147 - 167 தொகுதிளிலும், மெகா கூட்டணி 70 - 90 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது.
பீப்பிள்ஸ் இன்சைட் நடத்திய கருத்துக்கணிப்பில், என்டிஏ 133 - 148 தொகுதிகளிலும், மெகா கூட்டணி 87 - 102 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது. பீப்பிள்ஸ் பல்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், என்டிஏ 133 - 159 தொகுதிகளிலும், மெகா கூட்டணி 75-101 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது.
என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பில், என்டிஏ 152 தொகுதிகளிலும், மெகா கூட்டணி 84 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது. மூன்றாவது பெரிய சக்தியாக வரும் என எதிர்பார்க்கப்படும் ஜன சுராஜ் கட்சி வெற்றி வாய்ப்பில் குறிப்பிடும்படியான நிலையில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்தத் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி(ராம் விலாஸ்), இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. பாஜக 101 தொகுதிகளிலும், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளிலும், ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 28 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளிலும், உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 6 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அங்கித் குமார் என்ற சுயேட்சை ஒரு தொகுதியில் போட்டியிட்டார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ(எம்எல்), விகஷீல் இன்சான் கட்சி, சிபிஐ, சிபிஎம், இந்தியன் இன்குலுசிவ் கட்சி, ஜனசக்தி ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. ராஷ்ட்ரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, சிபிஐ(எம்எல்) 20, விகஷீல் இன்சான் கட்சி 12, சிபிஐ 9, சிபிஎம் 4, இண்டியன் இன்குலுசிவ் கட்சி 3, ஜனசக்தி ஜனதா தளம் 1, சுயேட்சைகள் 2 என மெகா கூட்டணியில் தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டன. பிரதமர் மோடி, அமித் ஷா, நிதிஷ் குமார், ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT