Published : 11 Nov 2025 05:12 PM
Last Updated : 11 Nov 2025 05:12 PM
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக திமுக, திரிணமூல் காங்கிரஸ், மேற்கு வங்க காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக 2 வாரங்களில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
பிஹாரை தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிர தேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டதை அடுத்து, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து திமுக, திரிணமூல் காங்கிரஸ், மேற்கு வங்க காங்கிரஸ் உள்பட 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பிஹாரில் எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அகில இந்திய அளவிலான எஸ்ஐஆர்-க்கு எதிரான இந்த மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கடந்த 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி, நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு இந்த மனுக்கள் மீதான விசாரணையை இன்று தொடங்கியது.
திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “எஸ்ஐஆர் மேற்கொள்வதற்கு இது ஏற்ற நேரம் அல்ல. தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கியுள்ளது. அறுவடை நேரம் இது. அதோடு, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை காலம் இது. எனவே, இது சாதகமற்ற நேரம். குறிப்பாக, ஏழை மற்றும் கிராமப்புற மக்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் மேற்கொள்ள இது உகந்த நேரம் அல்ல என்பது, நாட்டின் பிற பகுதிகளுக்கும் பொருந்தும். எஸ்ஐஆர் மேற்கொள்வதற்கு சட்டப்பூர்வ ஆதரவு இல்லை. பிஎல்ஓ-க்களுக்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.” என வாதிட்டார்.
அப்போது குறிக்கிட்ட நீதிபதி சூர்ய காந்த், “இந்த சிறப்பு தீவிர திருத்தம் நாட்டில் முதல்முறையாக நடப்பதுபோல நீங்கள் சித்தரிக்க முயல்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த கபில் சிபல், “கடந்த காலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள 3 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. தற்போது ஒரு மாதத்தில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டார்.
இதையடுத்து, ஆறு மனுக்கள் தொடர்பாகவும் பதில்மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க இரண்டு வார காலம் அவகாம் வேண்டும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கோரப்பட்டது. மேலும், சில உயர் நீதிமன்றங்கள் எஸ்ஐஆர் மனுக்களை விசாரிப்பதை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியது. இதையடுத்து, விசாரணையை நிறுத்திவைக்குமாறு சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றங்களை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
எஸ்ஐஆர் 2.O-ன் சட்ட சிக்கல்கள் குறித்து தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும் என தெரிவித்த நீதிபதி சூர்ய காந்த், எஸ்ஐஆர்-ன் அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் குறித்து பின்னர் விசாரிக்கப்படும் என கூறினார். இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆதார் அடையாள அட்டையை ஒரு அடையாள ஆவணமாக ஏற்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், எஸ்ஐஆர்-ஐ ஆதரிக்கும் அதிமுக, இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக்கொள்ளக் கோரி மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை ஏற்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT