Last Updated : 11 Nov, 2025 12:07 PM

1  

Published : 11 Nov 2025 12:07 PM
Last Updated : 11 Nov 2025 12:07 PM

டெல்லி கார் குண்டுவெடிப்பு: சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு; அமித் ஷா தலைமையில் அவசர ஆலோசனை

உமர் முகமது

டெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர் என்று சந்தேகிக்கப்படும் மருத்துவர் உமர் முகமதுவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. திங்கள்கிழமை மாலை செங்கோட்டை அருகே வெடித்துச் சிதறிய வெள்ளை நிற ஹூண்டாய் ஐ20 காரை உமர் இயக்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் உள்துறை செயலர், உளவுத்துறை இயக்குநர், டெல்லி போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

யார் இந்த உமர் முகமது? - ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் 1989 பிப்ரவரி 24 அன்று பிறந்த உமர், அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்தார். ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறையினரால் பயங்கரவாத நடவடிக்கையின் கீழ் நேற்று கைது செய்யப்பட்ட இரண்டு மருத்துவர்களான அதீல் அகமது ராதர் மற்றும் முஜம்மில் ஷகீல் ஆகியோரின் நெருங்கிய கூட்டாளியாக உமர் இருந்தார்.

கடந்த சில நாட்களாக பரிதாபாத்தில் இரண்டு முக்கிய நபர்களை கைது செய்து, 2,900 கிலோ வெடிப் பொருட்களைக் கைப்பற்றியதை அறிந்ததும் உமர் அங்கிருந்து இருந்து தப்பிச் சென்றார். இதனையடுத்தே அவர் இந்த குண்டுவெடிப்பை நடத்தியதாக கூறப்படுகிறது.

"உமர் முகமதுவும், அவரது கூட்டாளிகளும் டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்த அமோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெயை (ANFO) பயன்படுத்தினர். அவர்கள் காரில் ஒரு டெட்டனேட்டரை வைத்து, செங்கோட்டைக்கு அருகிலுள்ள நெரிசலான பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தினர்" என்று புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்தன.

நடந்தது என்ன? - செங்கோட்டை அருகே வெடித்த வெள்ளை ஹூண்டாய் ஐ20 கார் பதர்பூர் எல்லையிலிருந்து டெல்லிக்குள் நுழைவதை சிசிடிவி வீடியோ மற்றும் படங்கள் காட்டுகின்றன. அந்த கார் அவுட்டர் ரிங் ரோடு வழியாக பழைய டெல்லிக்கு வந்தது. HR 26CE7674 என்ற எண் கொண்ட அந்த வாகனம், செங்கோட்டைக்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த கார் வாகன நிறுத்துமிடத்தில் பிற்பகல் 3:19 மணிக்கு நுழைந்து மாலை 6:48 மணியளவில் புறப்பட்டுள்ளது, சிறிது நேரத்திலேயே அந்த கார் வெடித்துச் சிதறியது. சந்தேகிக்கப்படும் உமர் ஒரு நிமிடம் கூட காரை விட்டு வெளியேறவில்லை.

சிசிடிவி காட்சிகளில் ஆரம்பத்தில், ஓட்டுநரின் முகம் தெளிவாகத் தெரியும், ஆனால் கார் முன்னோக்கி நகரும்போது,பின்னால் முகமூடி அணிந்த ஒருவர் இருப்பதும் பதிவாகியுள்ளது.

விசாரணை அதிகாரிகள் தற்போது அருகிலுள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் வாகனத்தின் முழுமையான இயக்கத்தை கண்டறிய முடிவு செய்துள்ளனர்.

தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கார் பல பேரிடம் கைமாறியதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆதாரங்களின்படி, இந்த காரை சல்மான் மார்ச் 2025-ல் தேவேந்தருக்கு விற்றார். பின்னர், அது அக்டோபர் 29 அன்று தேவேந்தரிடமிருந்து ஆமிர் என்பவருக்கும், பின்னர் தாரிக் மற்றும் உமருக்கும் கைமாறியது. ஆமிர் மற்றும் தாரிக் இருவரையும் டெல்லி போலீஸ் விசாரித்து வருகிறது.

ஆமிர், உமர் முகமதுவின் சகோதரர் ஆவார். ஆமிர் கார் சாவியை வைத்திருக்கும் படங்கள் வெளியாகியுள்ளது. இது தேவேந்தரிடமிருந்து கார் வாங்கிய பிறகு எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.

கடந்த சில நாட்களாக பரிதாபாத்தில் பல மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இவர்கள் மீது பயங்கரவாத தாக்குதலைத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவரான அதீல் அகமது ராதரும் ஒருவர். ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை புகழ்ந்து சுவரொட்டிகளை ஒட்டுவதை சிசிடிவி காட்சிகள் காட்டிய பின்னர், நவம்பர் 6 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து அதீல் ராதர் கைது செய்யப்பட்டார்.

இந்த வார தொடக்கத்தில், போலீஸார் அனந்த்நாக்கில் சோதனை நடத்தி, அதீலின் லாக்கரில் இருந்து ஏகே-47 துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை கண்டுபிடித்தனர். அவர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் பரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை அதீலுடன் சேர்ந்து மற்றொரு மருத்துவரான முஜம்மில் ஷகீல் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது, அவர் நவம்பர் 10 அன்று கைது செய்யப்பட்டார்.

மருத்துவர் ஷகீலைப் போலவே பெண் மருத்துவரான டாக்டர் ஷாஹீன் ஷாஹித் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரது காரில் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டன. அதேபோல ரிசின் பயங்கரவாதத் தாக்குதலைத் திட்டமிட்டதாகக் கூறி குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவால் மருத்துவர் அகமது மொகியுதீன் சயீத் கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x