Published : 11 Nov 2025 01:00 AM
Last Updated : 11 Nov 2025 01:00 AM
புதுடெல்லி: டாஸ்மாக் முறைகேடு புகாரில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு தடை கோரிய அமலாக்கத் துறை மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வீடுகள் மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.
அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ்பாஸ்கரன் மற்றும் விக்ரம்ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் டாஸ்மாக் முறைகேட்டில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு அமலாக்கத் துறையிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. ஆதாரங்கள் இல்லாத நிலையில், இருவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தவும், பறிமுதல் செய்யவும் அமலாக்கத் துறைக்கு எந்த அதிகாரவரம்பும் இல்லை எனக் கூறி, அமலாக்கத் துறையின் மேல் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த ஜூன் 20-ம் தேதி உத்தரவிட்டது.
தடையை மீறி, ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு அதிகாரி சம்மன் அனுப்பியுள்ளதாக, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை உதவி இயக்குநரான விகாஸ் குமாரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அமலாக்கத் துறையின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், தற்போதைய நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை. இந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT