Published : 11 Nov 2025 12:47 AM
Last Updated : 11 Nov 2025 12:47 AM
சென்னை: நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தப்பட இருந்த ரசாயன தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் தீவிரவாத தடுப்புப் பிரிவுபோலீஸார் கண்காணிப்பை முடுக்கிவிட்டு உள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் பெஹல்காமில் கடந்த ஏப்ரலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். பின்னர் இந்தியா பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. இதற்கு பதிலடியாக தீவிரவாதிகள் மீண்டும் இந்தியாவுக்குள்புகுந்து நாச வேலைகளில் ஈடுபடவாய்ப்பு உள்ளதாக மத்திய புலனாய்வுத் துறை எச்சரித்தது.
எனவே அனைத்து மாநில போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டனர். மாநிலங்களில் கண்காணிப்பை அதிகரிக்கப்பட்டன. மேலும் மத்திய உளவுப் பிரிவுபோலீஸாரும் கண் காணிப்பைவிரிவுபடுத்தினர். இந்நிலையில்புதிய வடிவிலான ஒருங்கிணைந்த தாக்குதல்களை தீவிரவாதிகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நிகழ்த்த சதித்திட்டம் தீட்டிய தகவல் வெளியானது. இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பு மீண்டும் முடுக்கிவிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக குஜராத் மாநில பயங்கரவாத தடுப்புப் படையினர், அங்குள்ள காந்தி நகர் அதலஜ் சுங்கச்சாவடி அருகே 2 நாட்களுக்கு முன்பு கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின்பேரில் சோதித்தபோது அதில் 3 துப்பாக்கிகள், 30 தோட்டாக்கள், ஆபத்தான ‘ரிசின்’ என்ற ரசாயன திரவம் 4 லிட்டர் இருந்ததை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
‘ரிசின்” என்பது ஆமணக்கு விதைகளின் கழிவுப் பொருட்களிலிருந்து கிடைக்கும் மிக அதிக நச்சுத்தன்மை கொண்ட ஒரு ரசாயன விஷமாகும். அதைக்கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரசாயனத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து இதில் தொடர்புடைய, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்து காரை ஓட்டி வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த அகமது முகைதீன் உட்பட 3 பேர் கைது செய்தனர். விசாரணையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, எந்தெந்த இடங்களை அவர்கள் தேர்வு செய்தனர், எப்படிப்பட்ட தாக்குதலை நடத் தத் திட்டமிட்டிருந்தனர் என்பது குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, தமிழக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். மேலும், அனைத்து மாவட்ட உளவு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருடன் ஒருங்கிணைந்து கண்காணிக்கின்றனர். கடல்வழி பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களின் நடமாட்டம் தென்பட்டால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT