Published : 11 Nov 2025 12:24 AM
Last Updated : 11 Nov 2025 12:24 AM

ஹரியானாவில் சோதனையில் சிக்கிய 2,900 கிலோ வெடிபொருள்: பயங்கர சதி திட்டத்துக்காக பதுக்கியது அம்பலம்

ஹரியானாவின் பதேபூர் டகா கிராமத்தில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். படங்கள் : பிடிஐ

புதுடெல்லி: டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 2,900 கிலோ வெடிபொருட்கள் ஹரியானாவில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்டன. பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக பெண் மருத்துவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீரை சேர்ந்த மருத்துவர்கள் சிலருக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதுதொடர்பாக காஷ்மீர், ஹரியானா, குஜராத், உத்தர பிரதேச போலீஸார் கடந்த 15 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின்போது குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஆசாத், சுகைல், மருத்துவர் அகமது சயீது ஆகிய 3 தீவிரவாதிகள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி சுபைன் உத்தரவின்பேரில் 3 பேரும் பணம், ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் ஆதில் அகமது ரத்தர், உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூரில் பணியாற்றி வந்தார். பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மருத்துவர் ஆதில் அகமது ரத்தரின் காதலி மருத்துவர் ஷாகின். உத்தர பிரதேச தலைநகர் லக்னோவை சேர்ந்த இவர் ஹரியானாவின் தோஜ் நகரில் உள்ள அல் பலா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்தார். அவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரது காரில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி, ஏராளமான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஹரியானாவில் மருத்துவர் கைது: ஹரியானாவின் தோஜ் நகரில் உள்ள அல் பலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் முஜம்மில் ஷகீல் பணியாற்றி வந்தார். பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த அவர் கடந்த 30-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

ஹரியானாவில் தோஜ் நகரில் ஷகீல் தங்கியிருந்த வீட்டில் காஷ்மீர், ஹரியானா போலீஸார் இணைந்து கடந்த நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது 350 கிலோ வெடிபொருட்கள், 20 டைமர்கள், துப்பாக்கிகள், கைத்துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஹரியானாவின் பதேபூர் டகா கிராமத்தில் ஷகீல் வாடகைக்கு எடுத்திருந்த ஒரு வீட்டில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது 2,563 கிலோ வெடிபொருட்கள், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளர் மவுலானா நேற்று கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: மொத்தம் 8 பேர் கைதாகி உள்ளனர். டெல்லியின் ஆசாத்பூர் மண்டி, அகமதாபாத்தின் காய்கனி சந்தை, லக்னோ ஆர்எஸ்எஸ் அலுவலகம் மற்றும் வட மாநிலங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளபகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக 4 மருத்துவர்கள் உட்பட 8 பேரும் ஆயுதங்கள், வெடிமருந்துகளை பதுக்கி வைத்துள்ளனர். இதுவரை 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x