Published : 10 Nov 2025 02:32 PM
Last Updated : 10 Nov 2025 02:32 PM
கோரக்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
கோரக்பூரில் நடந்த 'ஏக்த யாத்திரை' மற்றும் வந்தே மாதரம் பாடும் நிகழ்வில் பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடுவது தேசத்தின் மீது மரியாதை மற்றும் பெருமையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய பாடலான வந்தே மாதரத்துக்கு மரியாதை உணர்வு இருக்க வேண்டும். உத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்வி நிறுவனத்திலும் அதைப் பாடுவதை கட்டாயமாக்குவோம்" என்று கூறினார்.
வங்கமொழி கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி கடந்த 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ல் வந்தே மாதரம் பாடலை எழுதினார். “பாரத அன்னையே நான் உனக்கு தலைவணங்குகிறேன்” என்ற பொருளில் எழுதப்பட்ட இந்த பாடலுக்கு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வந்தே மாதரம் பாடல் மிகப்பெரிய உத்வேகம் அளித்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி வந்தே மாதரம் தேசிய பாடலாக அறிவிக்கப்பட்டது. இந்த பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.
இதையொட்டி மத்திய அரசு சார்பில் டெல்லியில் நவம்பர் 7 அன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது வந்தே மாதரம் பாடலின் நினைவாக அஞ்சல் தலை, நாணயத்தை அவர் வெளியிட்டார். மேலும் பாடலின் ஓராண்டு கொண்டாட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இதன்படி அடுத்த ஆண்டு நவம்பர் 7-ல் நாடு முழுவதும் பல்வேறு விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறோம். வந்தே மாதரம் என்பது வெறும் வார்த்தை கிடையாது. இது ஒரு மந்திரம், ஒரு சக்தி, ஒரு கனவு, ஒரு தீர்மானம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது குண்டுகள் வீசப்பட்டபோது, அவர்களின் ஒரே மந்திரமாக வந்தே மாதரம் இருந்தது. பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்கள் தூக்கு மேடையில் நின்று கொண்டு வந்தே மாதரம் பாடலை பாடினர். இந்த நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற வேண்டும். இதற்காக சுயசார்பு இந்தியா திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
நமது ராணுவம், எதிரிகளின் சதித் திட்டங்களை முறியடிக்கும்போதும், தீவிரவாதத்தை முறியடிக்கும்போதும், நமது வீரர்களின் ஒரே மந்திரமாக வந்தே மாதரம் விளங்குகிறது. இந்தப் பாடல் இந்தியாவை ஒன்றிணைக்கிறது. நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT