Published : 10 Nov 2025 09:32 AM
Last Updated : 10 Nov 2025 09:32 AM
டோக்கியோ: உலகின் மிக விலை உயர்ந்த அரிசி ஜப்பானில் விளைவிக்கப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோ ரூ.12,500 ஆக உள்ளது.
தெற்காசியாவில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு மொழி, வரலாறு, உணவு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் உள்ளது. என்றாலும் இந்த நாடுகளிடையே பொதுவான விஷயமாக அரிசி உள்ளது. ஒவ்வொரு நாடும் தனித்துவமான அரிசி வகைகளை உற்பத்தி செய்கின்றன. இவை பெரும்பாலும் எல்லோராலும் வாங்கக் கூடிய விலையிலேயே கிடைக்கின்றன. என்றாலும் ஜப்பானின் கின்மேமை பிரீமியம் அரிசி ஒரு ஆடம்பர பொருளாக விளங்குகிறது.
டோயோ ரைஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதை உற்பத்தி செய்கிறது. இந்த அரிசி 6 மாதங்கள் பதப்படுத்தப்பட்டு சுவை கூட்டப்படுகிறது. கடந்த 2016-ல் மிகவும் விலை உயர்ந்த அரிசியாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இந்த அரிசி இடம் பெற்றுள்ளது. வழக்கமான அரிசியை சமைப்பதற்கு முன் அதை இரண்டு முறை கழுவி, சற்றுநேரம் ஊறவைக்க வேண்டும்.
அதிகப்படியான ஸ்டார்ச் மற்றும் அழுக்குகளை நீக்க வேண்டும். ஆனால் கின்மேமை பிரீமியம் அரிசி, நவீன நெல் அரவையில் முன்கூட்டியே கழுவப்படுகிறது. ஸ்டார்ச் மற்றும் தவிடு அகற்றப்படுகிறது. இதனால் இந்த அரிசியை சமைப்பதற்கு முன் கழுவ வேண்டிய அவசியமில்லை.
இந்த அரிசி இணையற்ற ஊட்டச் சத்துகளை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது நமது வழக்கமான அரிசியை விட 6 மடங்கு அதிக லிப்போபோலிசாக்கரைடுகளை (எல்பிஎஸ்) கொண்டுள்ளது. இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் உடல் நோய்களை எதிர்த்துப் போராட உதவும் என்று கூறப்படுகிறது.
இந்த அரிசி ஜப்பானின் கோஷிஹிகாரி பகுதியில் விளைவிக்கப்படுகிறது. மலைகளால் சூழப்பட்டதாக இந்தப் பகுதியின் வெப்பநிலை இந்த அரிசி உற்பத்திக்கு ஏற்றதாக உள்ளது. இந்த அரிசி உற்பத்தியின் பின்னணியில் இருப்பவர், டோயோ ரைஸ் கார்ப்பரேஷனின் 91 வயது தலைவர் கெய்ஜி சாய்கா.
இவர் கடந்த 2016-ல் கின்மேமை பிரீமியம் அரிசியை அறிமுகப்படுத்தினார். அப்போது 840 கிராம் அரிசி பாக்கெட்டை 9,496 ஜப்பானிய யென்னுக்கு (சுமார் ரூ.5,490) விற்கத் தொடங்கினார். அப்போது வழக்கமான அரிசி வகைகள் ஒரு கிலோ 300 முதல் 400 யென் (ரூ.173 முதல் ரூ.231) வரை விற்கப்பட்டன. தற்போது கின்மேமை பிரீமியம் அரிசியின் 840 கிராம் பாக்கெட் விலை ரூ.10,548 ஆக உள்ளது. இதன்படி ஒரு கிலோ விலை ரூ.12,557 ஆகும்.
உலகின் மிக விலை உயர்ந்த அரிசிகளில் ஒன்றாக இது இருந்தாலும் இதன் வணிகம் லாபகரமானது அல்ல என்கிறார் சாய்கா. என்றாலும் ஜப்பானிய அரிசி உற்பத்தியை மேம்படுத்துவதற்கான அவரது பல கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT