Published : 10 Nov 2025 09:17 AM
Last Updated : 10 Nov 2025 09:17 AM
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் உதயமாகி 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அங்கு ரூ.8,260 கோடிக்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
உத்தராகண்ட் மாநிலம் உதயமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் வெள்ளி விழாவை முன்னிட்டு அங்கு அவர் ரூ.930 கோடிக்கும் மேற்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ.7,210 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இவற்றில் குடிநீர் , நீர்ப்பாசனம், தொழில்நுட்பக் கல்வி, எரிசக்தி, நகர்ப்புற வளர்ச்சி, விளையாட்டு மற்றும் திறன்மேம்பாடு ஆகிய திட்டங்கள் அடங்கியுள்ளன.
பிஎம் ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ், 28,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.62 கோடியை நிதியை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த விடுவித்தார். பிரதமர் தொடங்கிய திட்டங்கள் மூலம் டேராடூனில் 23 மண்டலங்களுக்கு அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்கப்படும். பிதோராகர் மாவட்டத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
அரசு கட்டிடங்களில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்படும். நைனிடாலில் உள்ள ஹல்த்வானி அரங்கத்தில் செயற்கை புல் ஹாக்கி மைதானம் அமைக்கப்படும்.
டேராடூனில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கும் வகையில் சாங் அணை திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். நைனிடாலில் தொடங்கப்பட்ட ஜமாராணி அணை திட்டம் மூலம் குடிநீர், நீர்ப்பாசனம் ஆகியவை வழங்கப்படும் மற்றும் மின் உற்பத்தி செய்யப்படும். சம்பவாட் பகுதியில் துணை மின்நிலையங்கள், பெண்கள் விளையாட்டு கல்லூரி உட்பட இதர திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT