Last Updated : 09 Nov, 2025 03:46 PM

15  

Published : 09 Nov 2025 03:46 PM
Last Updated : 09 Nov 2025 03:46 PM

ஆர்எஸ்எஸ் ஏன் பதிவு செய்யப்படவில்லை? - மோகன் பகவத் விளக்கம்

மும்பை: பதிவு இல்லாமல் செயல்படுவதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்த நிலையில், ஆர்எஸ்எஸ் தனிநபர்களின் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அதன் தலைவர் மோகன் பகவத் கூறினார். மேலும், அவர் இந்து தர்மம் கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார்.

கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான பிரியங்க் கார்கே, தேசத்திற்கு சேவை செய்வதாகக் கூறிக்கொள்ளும் ஆர்எஸ்எஸ் ஏன் பதிவு செய்யப்படாத அமைப்பாக உள்ளது என்று கேள்வி எழுப்பினார். பிரியங்க் கார்கேவின் கருத்துகளுக்கு பதிலளித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “ஆர்எஸ்எஸ் 1925 இல் தொடங்கியது. நாங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய அரசு பதிவை கட்டாயமாக்கவில்லை.

சட்டம் பதிவு செய்யப்படாத தனிநபர்களின் அமைப்புகளைக் கூட அங்கீகரிக்கிறது. நாங்கள் தனிநபர்களின் அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளோம், நாங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு. நாங்கள் வருமான வரி செலுத்துகிறோம். மூன்று முறை தடை செய்யப்பட்டோம், ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்கள் எங்கள் அமைப்பின் தடையை நீக்கின.

அரசாங்கங்களும், நீதிமன்றங்களும் எங்களை ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக அங்கீகரித்துள்ளன. எனவே, நாங்கள் பதிவு செய்ய வேண்டியதில்லை. பல விஷயங்கள் பதிவு செய்யப்படவில்லை, இந்து தர்மம் கூட பதிவு செய்யப்படவில்லை. ஆர்எஸ்எஸ் காவி கொடிகளை மதிக்கிறது. அதே வேளையில், இந்திய மூவர்ணக் கொடிக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறோம்." என்று மோகன் பகவத் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கே தனது எக்ஸ் பதிவில், "ஆர்எஸ்எஸ் உண்மையிலேயே தன்னலமின்றி தேசத்திற்கு சேவை செய்தால், வெளிப்படைத்தன்மையுடனும் சட்டப்பூர்வமாகவும் செயல்படும் லட்சக்கணக்கான அரசு சாரா நிறுவனங்களைப் போல ஏன் பதிவு செய்யக்கூடாது?. பதிவு செய்யப்படாத ஒரு அமைப்பின் தலைவர் ஏன் மேம்பட்ட பாதுகாப்பினை பெறுகிறார். அவரை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு இணையாக வைப்பது ஏன்?. ஆர்எஸ்எஸ்க்கு யார் நிதியளிக்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x