Published : 09 Nov 2025 02:41 PM
Last Updated : 09 Nov 2025 02:41 PM
பாட்னா: தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார். அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதனை கூறியுள்ளார்.
பொறுப்பற்ற நடத்தை காரணமாக தேஜ் பிரதாப் யாதவை ஆறு ஆண்டுகளுக்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியில் இருந்து நீக்குவதாக அவரது தந்தையும், கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார். மேலும் பிரதாப்புடனான அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து கொள்வதாக அப்போது தெரிவித்தார்.
இதன் பின்னர் ஜன் சக்தி ஜனதா தளம் என்ற தனி கட்சியை தேஜ் பிரதாப் யாதவ் தொடங்கினார். தற்போது நடைபெற்று வரும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் அவரது கட்சி 22 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதியில் அவர் போட்டியிட்டுள்ளார்.
இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களை தேஜ் பிரதாப் யாதவ் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “எனக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. நான் எனது எதிரிகளால் கொல்லப்படலாம். எனது இளைய சகோதரர் தேஜஸ்வி யாதவுக்கு எனது ஆசிகள் என்றும் இருக்கும். அவர் மென்மேலும் வளர்ந்து பல உயரத்தை எட்ட வேண்டுமென விரும்புகிறேன்” என்றார்.
பிஹார் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதனால் இன்று மாலை உடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT