Published : 09 Nov 2025 01:10 AM
Last Updated : 09 Nov 2025 01:10 AM
புதுடெல்லி: பிஹாரில் சாலையோரம் விவிபாட் ஒப்புகைச்சீட்டு கிடந்தது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் பிஹாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் சாலையோரம் விவி பாட் ஒப்புகைச்சீட்டுகள் சிதறிக் கிடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டது.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று கூறியதாவது: சம்பவ இடத்துக்கு சமஸ்திபூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரிக்க உத்தரவிடப்பட்டது. பிஹார் தேர்தலுக்கு முன், மாதிரி வாக்குப் பதிவு நடத்தி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் விவிபாட் சீட்டுகளே அங்கு கிடந்துள்ளன. எனவே பிஹார் தேர்தல் நடைமுறையில் எவ்விதத்திலும் நேர்மை சமரசம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து வேட்பாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அலட்சியமாக செயல்பட்டதற்காக சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அதிகாரி (ஏஆர்ஓ) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT