Published : 08 Nov 2025 09:15 PM
Last Updated : 08 Nov 2025 09:15 PM
புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.57 லட்சம் மோசடி செய்யப்பட்டது. தற்போது அந்த பணம் அவரது வங்கிக் கணக்கில் மீண்டும் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ‘நாட்டில் சைபர் மோசடி தடுப்பு பிரிவு ஏன் இல்லை?’ என நிதி அமைச்சகத்தை நோக்கி அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் கூறியது: “மக்கள் பிரதிநிதியான நானே சைபர் மோசடியால் பாதிக்கப்பட்ட நிலையில் சாமானிய மக்களை கொஞ்சம் எண்ணி பார்க்க வேண்டி உள்ளது. நிதி அமைச்சகம் ஏன் சைபர் மோசடி தடுப்பு பிரிவை அமைக்கவில்லை?
என்னுடைய வங்கிக் கணக்கில் ரூ.57 லட்சம் உள்ளது என்பதை எப்படி இந்த மோசடியாளர்கள் கண்டறிந்தார்கள். கேஒய்சி சரிபார்ப்பு மூலம் இந்த மோசடி நடந்துள்ளதாக தகவல். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. எஸ்பிஐ வங்கியும் புகார் அளித்துள்ளது. இருப்பினும் வெள்ளிக்கிழமை அன்று எனது வங்கி கணக்கில் அந்த பணத்தை மீண்டும் வங்கித் தரப்பு கிரெடிட் செய்தது” என அவர் கூறியுள்ளார்.
மோசடி நடந்து எப்படி? - கடந்த 2001-2006 காலகட்டத்தில் கல்யாண் பானர்ஜி மேற்குவங்க மாநில சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது இந்த வங்கிக் கணக்கை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்யாண் பானர்ஜியின் ஊதியம், படிகள் இந்த வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டன.
தற்போது ஸ்ரீராம்பூர் தொகுதி எம்பியாக கல்யாண் பானர்ஜி பதவி வகிக்கிறார். எம்பியான பிறகு கொல்கத்தாவில் உள்ள பொதுத்துறை வங்கிக் கணக்கை அவர் மிக நீண்ட காலமாக பயன்படுத்தவில்லை. அவர் தெற்கு கொல்கத்தாவில் உள்ள மற்றொரு வங்கிக் கணக்கை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.
இந்தச் சூழலில் ஒரு மோசடி கும்பல், கல்யாண் பானர்ஜி பெயரில் போலி பான் கார்டு, ஆதார் கார்டை தயாரித்து அவரது தெற்கு கொல்கத்தா வங்கிக் கணக்கின் மொபைல் போன் எண்ணை மாற்றி உள்ளனர்.
இதன் மூலம் அந்த வங்கிக் கணக்கின் ஆன்லைன் பரிவர்த்தனை வசதிகள் மோசடி கும்பலின் வசமானது. இதைத் தொடர்ந்து தெற்கு கொல்கத்தா வங்கிக் கணக்கில் இருந்து கல்யாண் பானர்ஜியின் பழைய வங்கிக் கணக்குக்கு ரூ.56 லட்சம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதன்பிறகு பழைய வங்கிக் கணக்கில் இருந்து பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டு உள்ளது.
மேலும், பானர்ஜியின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி நகைக்கடைகளில் பெருந்தொகைக்கு நகைகள் வாங்கப்பட்டு உள்ளன. பல்வேறு ஏடிஎம் மையங்களில் இருந்தும் பணம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.57 லட்சமும் மோசடி செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT