Published : 08 Nov 2025 05:41 PM
Last Updated : 08 Nov 2025 05:41 PM
ரோஹ்தாஸ் (பிஹார்): வெற்றிகரமான அரசியல் வாழ்க்கைக்காக வாக்கு திருட்டு நடப்பதாக பொய் சொல்வதா என ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஹாரின் ரோஹ்தாஸில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், "பிஹார் தேர்தலை முன்னிட்டு வாக்கு திருட்டு குற்றச்சாட்டை ராகுல் காந்தி முன்வைக்கிறார். இதன்மூலம், தேர்தலுக்கு முன்னதாக அவர் வாக்காளர்களை தவறாக வழிநடத்துகிறார். பிஹார் மக்களின் வாக்குகள் திருடப்படுவதாக ராகுல் காந்தி உண்மையிலேயே நம்பினால், தேர்தல் ஆணையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்திருக்க வேண்டும். அவர் அதைச் செய்யாதது ஏன்?
உண்மையைப் பேசுவதன் மூலம் அரசியல் செய்ய முடியாதா என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையைப் பெற பொய் சொல்வது முக்கியமா?
பிற்படுத்தப்பட்ட சமூகம் குறித்தும் தலித் சமூகம் குறித்தும் ராகுல் காந்தி இவ்வளவு கவலையை வெளிப்படுத்துகிறார். அப்படி எனில், அவர் ஏன் எதிர்க்கட்சித் தலைவரானார்? அந்த வாய்ப்பை ஏன் ஒரு தலித்துக்கோ அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகத்தவருக்கோ கொடுக்கவில்லை? தேசிய ஜனநாயகக் கூட்டணி அனைவருக்கும் சமமான மற்றும் போதுமான பிரதிநிதித்துவத்தை வழங்குகிறது.
மகா கூட்டணியினர் மக்களிடம் பொய் சொல்லி வெற்றிபெற விரும்புகிறார்கள். ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியை நான் கேட்கிறேன், ஒவ்வொரு வீட்டுக்கும் அரசு வேலை எப்படி வழங்க முடியும்? நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றை ஏன் வாக்குறுதியாக அளிக்கிறீர்கள்?
நீங்கள் அனைவரும் படித்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் இதை சாத்தியமாக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். இருந்தும் ஏன் இப்படி ஒரு வாக்குறுதியை வழங்கினீர்கள்? அரசு வேலையை விரும்பும் அனைவருக்கும் வேலை வழங்க முயல்வோம் என்பதுதான் எங்கள் இலக்கு.
காங்கிரஸ் என்றால் முஸ்லிம்கள்; முஸ்லிம்கள் என்றால் காங்கிரஸ் என தெலங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தி அதன்மூலம் அவர்கள் அரசியல் வெற்றியைப் பெற்றுள்ளனர். சாதி, மதத்தின் அடிப்படையில் நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுகிறோமா இல்லையா என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நீதி மற்றும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் மட்டுமே நாங்கள் அரசியல் செய்வோம்.” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT