Last Updated : 08 Nov, 2025 04:48 PM

2  

Published : 08 Nov 2025 04:48 PM
Last Updated : 08 Nov 2025 04:48 PM

பிஹாரில் இருந்து ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர்: அமித் ஷா

அமித் ஷா

பூர்னியா (பிஹார்): சீமாஞ்சல் பகுதியில் இருந்தும், பிஹாரில் இருந்தும் ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பூர்னியா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, "பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு குழுக்களாக கட்சிகள் பிரிந்துள்ளன. ஒருபக்கம், குண்டர்களின் கூட்டணி. மறுபக்கம், பஞ்சபாண்டவர்களைப் போல 5 கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி. பிஹார் முதற்கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பிஹாரில் பாதி பேர் வாக்களித்துள்ளனர். முதற்கட்டத் தேர்தலில் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் அழிக்கப்பட்டுள்ளது.

அடுத்து நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தல் மூலம், தொலைநோக்கி கொண்டு பார்த்தால்கூட தெரியாத அளவுக்கு ஆர்ஜேடி கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 160 தொகுதிகளுக்கும் மேலான இடங்களைப் பிடித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க தயாராக இருக்கிறது. மோடி - நிதிஷ் குமார் தலைமையில் பிஹார், குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி வளர்ந்த மாநிலமாக மாற தயாராக உள்ளது.

பிஹார் வெள்ளத்தால் பாதிக்கப்படாத மாநிலமாக மாற்ற நாங்கள் திட்டமிட்டுள்ளோம். நேபாளத்தில் இருந்து வரும் அனைத்து நதிகளையும் இணைப்பதன் மூலம் வெள்ள நீரை விவசாயிகளின் வயல்களுக்கு நாங்கள் திருப்பி விடுவோம். 2025 மத்திய பட்ஜெட்டில், கோசி - மெச்சி நதிகள் இணைப்பு திட்டத்தை மோடி அறிவித்துள்ளார். கோசி பகுதியையும் சீமாஞ்சல் பகுதியையும் வெள்ளத்தில் இருந்து விடுவிக்க இத்திட்டம் உதவும்.

சமீபத்தில் ராகுல் காந்தி பிஹாரில் யாத்திரை நடத்தினார். யாருக்காக அவர் யாத்திரை நடத்தினார் என நான் கேட்க விரும்புகிறேன். பிஹாரின் ஏழைகளுக்காகவா, தாய்மார்களுக்காகவா, இளைஞர்களுக்காகவா அவர் யாத்திரை நடத்தினார். இல்லை, ஊடுருவல்காரர்களைக் காப்பாற்றவே அவர் யாத்திரை நடத்தினார்.

லாலு பிரசாத் யாதவுக்கும் ராகுல் காந்திக்கும் ஊடுருவல்காரர்கள் ஒரு வாக்கு வங்கி. அதனால்தான் அவர்களைப் பாதுகாக்க ஊடுருவல்காரர்களைக் காப்பாற்றுங்கள் என்ற பிரச்சாரம் செய்கிறார்கள். அந்த வாக்கு வங்கிக்கு நாங்கள் அஞ்சவில்லை. அவர்களை ஒவ்வொருவராக நாங்கள் வெளியேற்றப் பாடுபடுவோம்.

சீதாதேவி பிறந்த சீதாமர்ஹியில் அவருக்கு கோயில் கட்டப்படும். இரண்டு மாதங்களுக்கு முன்பு நானும் முதல்வர் நிதிஷ் குமாரும் அதற்கான அடிக்கல்லை நாட்டினோம். இன்னும் இரண்டரை ஆண்டுகளில் பிரம்மாண்ட கோயில் கட்டி முடிக்கப்படும்.

ஏராளமான படுகொலைகளுக்கு மத்தியில் காட்டாட்சி நடத்தியவர் லாலு பிரசாத் யாதவ். மாட்டுத் தீவன ஊழல், அரசு வேலை வழங்குவதில் நில ஊழல், ஹோட்டல் விற்பனை ஊழல், தார் ஊழல், வெள்ள நிவாரண ஊழல், ஏற்றுமதி ஊழல் என ஏராளமான ஊழல்களைச் செய்தவர் லாலு பிரசாத் யாதவ். தனது மகனை முதல்வராக்க வேண்டும் என்பது மட்டுமே அவரது குறிக்கோள். அதேபோல், ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க வேண்டும் என்பதே சோனியா காந்தியின் குறிக்கோள். இவர்களின் குறிக்கோள் ஒருபோதும் நிறைவேறாது." என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x