Published : 08 Nov 2025 12:11 PM
Last Updated : 08 Nov 2025 12:11 PM
வாராணசி: உத்தரப் பிரதேசத்தின் வாராணசியில் இருந்து நான்கு புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
காசி-கஜுராஹோ வந்தே பாரத், ஃபிரோஸ்பூர்-டெல்லி வந்தே பாரத், லக்னோ-சஹரன்பூர் வந்தே பாரத், எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ஆகிய நான்கு வந்தே பாரத் ரயில்கள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டன. அப்போது, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். விழாவின்போது, வந்தே பாரத் ரயிலில் மாணவர்கள் மற்றும் சிறுவர்-சிறுமிர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “உலகெங்கிலும் வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு முக்கிய உந்து சக்தியாக இருந்து வருகிறது. இன்று இந்தியாவும் இந்த பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய வந்தே பாரத் ரயில்களின் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த நான்கு புதிய வந்தே பாரத் ரயில்களோடு, நாட்டில் 160க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வந்தே பாரத், நமோ பாரத், அம்ரித் பாரத் போன்ற ரயில்கள் அடுத்த தலைமுறை இந்திய ரயில்வேக்கு அடித்தளம் அமைத்து வருகிறது. இது இந்திய ரயில்வையை மாற்றுவதற்கான ஒரு விரிவான முயற்சியாகும். வந்தே பாரத் என்பது இந்தியர்களுக்காக இந்தியர்களால் கட்டப்பட்ட ஒரு ரயில். இதற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுகிறார்கள்.
பல நூற்றாண்டுகளாக நமது நாட்டில் புனித யாத்திரைகள் மக்களை இணைக்கும் கருவிகளாக இருந்து வருகின்றன. புனித யாத்திரை என்பது தெய்வீகத்துக்கான பாதை மட்டுமல்ல, இந்தியாவின் ஆன்மாவை இணைக்கும் ஒரு புனித பாரம்பரியமாகும். பிரயாக்ராஜ், அயோத்தி, ஹரித்துவார், சித்ரகூட், குருஷேத்ரா போன்ற எண்ணற்ற புனித யாத்திரைத் தலங்கள் நமது ஆன்மிக நீரோட்டத்தின் மையங்களாக உள்ளன. இந்த புனித இடங்கள் வந்தே பாரத் ரயில்களால் இணைக்கப்படும்போது அது இந்தியாவின் கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் வளர்ச்சியை இணைப்பதற்கான ஒரு வழியாகவும் உள்ளது. நமது நாட்டின் பாரம்பரிய நகரங்களை நாட்டின் வளர்ச்சியின் அடையாளங்களாக மாற்றுவதற்கான ஒரு முக்கிய படியாக வந்தே பாரத் ரயில்கள் உள்ளன.” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT