Published : 08 Nov 2025 12:27 AM
Last Updated : 08 Nov 2025 12:27 AM
புதுடெல்லி: தமிழக டிஜிபி நியமனம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த கிஷோர் கிருஷ்ணசாமி சார்பில் வழக்கறிஞர் எம்.வீரராகவன் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தற்போதுள்ள டிஜிபி பதவிக்காலம் முடியும் முன்னரே, அடுத்த டிஜிபிக்கான பெயர் பட்டியலை யுபிஎஸ்சிக்கு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு முன் அனுப்பி வைக்க வேண்டும். தற்காலிக டிஜிபி என யாரையும் எந்த மாநிலமும் நியமிக்கக் கூடாது எனப் பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.
இதற்காக தமிழக தலைமை செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து மதுரையைச் சேர்ந்த மனித உரிமைகள் செயல்பாட்டாளர் ஹென்றி திபேன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசு அனுப்பியுள்ள பெயர் பட்டியலை விரைந்து யுபிஎஸ்சி பரிசீலிக்க வேண்டும். யுபிஎஸ்சி பரிந்துரையின் பேரில் நிரந்தர டிஜிபியை தமிழக அரசு விரைந்து நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் கடந்த செப்.7-ம் தேதி முடித்து வைத்தது.
இந்நிலையில், யுபிஎஸ்சி பரிந்துரைத்தும் டிஜிபியை நியமிக்க தமிழக அரசு மறுத்து வருகிறது. நிரந்தர டிஜிபியை நியமிக்காமல், ஆளுங்கட்சிக்கு சாதமாக செயல்படும் வகையில் தற்காலிக டிஜிபி பணியில் தொடர்கிறார். இந்த விவகாரத்தில் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்கும் வரை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தாது.
எனவே, பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரகாஷ் சிங் வழக்கின் தீர்ப்பின்படி விரைந்து டிஜிபியை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று கிஷோர் கிருஷ்ணசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை உச்ச நீதிமன்றதலைமை நீதிபதி பி.ஆர். கவாய்தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர்சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். தமிழக அரசின் சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை தொடர்ந்து,3 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT