Last Updated : 07 Nov, 2025 05:03 PM

1  

Published : 07 Nov 2025 05:03 PM
Last Updated : 07 Nov 2025 05:03 PM

ஆர்ஜேடியின் தேர்தல் வாக்குறுதிகள் மீது காங்கிரஸ் கட்சிக்கே நம்பிக்கையில்லை: மோடி

அவுரங்காபாத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி

அவுரங்காபாத் (பிஹார்): பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் அளித்துள்ள வாக்குறுதிகள் மீது அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கே நம்பிக்கையில்லை என்று பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தலை முன்னிட்டு அவுரங்காபாத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, "இதுவரை இல்லாத அளவுக்கு பிஹார் மக்கள் முதற்கட்டத் தேர்தலில் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். முதற்கட்டத் தேர்தலில் கிட்டத்தட்ட 65% வாக்குகள் பதிவாகி உள்ளன. மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் வருவதை பிஹார் மக்கள் உறுதி செய்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்பவில்லை என்பதை இது தெளிவுபடுத்துகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் அதன் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களை நிறைவேற்றுகிறது. இதையே வேறு வார்த்தைகளில் கூறுவதாக இருந்தால், ஒவ்வொரு பகுதியின் ஆற்றலுக்கு ஏற்ப தொழில்கள் அமைக்கப்படுகின்றன.

ராமர் கோயில் கட்டப்படும் என்ற வாக்குறுதி, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி என அனைத்து வாக்குறுதிகளையும் மோடி நிறைவேற்றி இருக்கிறார்.

ஒரு பதவிக்கு ஒரு ஓய்வூதியம் என்ற நமது ராணுவ வீரர்களின் கோரிக்கையை 11 ஆண்டுகளுக்கு முன்பு இதே நவம்பர் 7-ம் தேதி மோடி நிறைவேற்றினார். இந்த கோரிக்கை நமது ராணுவ வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கை. இந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் அவர்களை ஏமாற்றியது. தற்போது நமது ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது.

மோடியை நீங்கள் பிரதமராக பதவியில் அமர்த்தியபோது நாட்டில் நக்ஸலிசம் மற்றும் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தின் முதுகெலும்பை உடைக்க நான் உறுதிபூண்டேன். இன்று பிஹார், அந்த பயங்கரவாதத்தின் அச்சத்தில் இருந்து விடுபட்டுள்ளது. மாவோயிஸ்ட் பயங்கரவாதம் இப்போது அழிவின் விளிம்பில் உள்ளது.

ஆர்ஜேடி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் மீது அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கே நம்பிக்கையில்லை. அதன் காரணமாகத்தான் அவர்கள், அந்த வாக்குறுதிகள் குறித்து பேசுவதில்லை. ஆர்ஜேடியின் அந்த பொய் மூட்டையை பிஹார் மக்களும் நிராகரித்துவிட்டனர். மோடி - நிதிஷ் குமாரின் ஆட்சி மீது பிஹார் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நாங்கள் கடந்து வந்த பாதைதான் அதற்குக் காரணம்” என்று மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x