Published : 07 Nov 2025 11:35 AM
Last Updated : 07 Nov 2025 11:35 AM

ஹரியானா தேர்தலில் வாக்கு திருட்டு நடைபெறவில்லை: ராகுல் காந்தி புகாருக்கு பெண்கள் பதில்

முனிஷ் தேவி, லாரிசா நெரி, பிங்கி ஜுகிந்தர்

சண்டிகர்: ஹரியானாவில் வாக்கு திருட்டு நடைபெறவில்லை என்று பெண் வாக்காளர்கள் விளக்கம் அளித்து உள்ளனர்.

ஹரியானாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் குற்றம் சாட்டினார். குறிப்பாக பிரேசிலை சேர்ந்த மாடல் அழகியின் புகைப்படம் 22 பெயர்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது என்று அவர் புகார் கூறினார்.

இதுகுறித்து முனிஷ் தேவி என்ற பெண் கூறும்போது, “எனது வாக்காளர் அட்டையில் பிரேசில் மாடல் அழகி புகைப்படம் இருப்பதாக ராகுல் காந்தி கூறியது தவறு. எனது அட்டையில் எனது புகைப்படம் மட்டுமே இடம் பெற்றிருக்கிறது. ராகுல் காந்தி காட்டிய புகைப்படம் யாருடையது என்பது எனக்கு தெரியாது. அது போலி அட்டை” என்று தெரிவித்தார்.

பிங்கி ஜுகிந்தர் கவுசிக் என்பவர் கூறும்போது, “எனது வாக்காளர் அட்டையில் நீண்ட காலமாக புகைப்படம் தவறாக அச்சிடப்பட்டு வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டு தேர்தலில் நான் வாக்களித்தேன். வாக்கு திருட்டு நடைபெறவில்லை. புகைப்படம் மட்டுமே மாறியி ருக்கிறது” என்று தெரிவித்தார்.

ஹரியானா முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான நயாப் சிங் சைனி கூறும்போது, “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை மறைக்க ராகுல் காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுகிறார்” என்று குற்றம் சாட்டினார்.

பாஜக மூத்த தலைவர் சதீஷ் புனியா கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி மக்களின் மனங்களை வென்றுள்ளார். அவரது வளர்ச்சி திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாஜகவுக்கு மக்கள் வாக்களித்து வருகின்றனர். தேர்தல் தோல்வியை மறைக்க ராகுல் காந்தி பொய்களை பரப்பி வருகிறார். இந்த முயற்சியை கைவிட்டு தனது கட்சியை வலுப்படுத்த அவர் முயற்சி மேற்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

எனக்கு தொடர்பில்லை: பிரேசில் மாடல் அழகி லாரிசா நெரி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: எனது பழைய புகைப்படம் இந்திய வாக்காளர் அட்டைகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது, எனது ஆரம்ப கால மாடலிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். இந்திய அரசியலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

நான் இந்தியாவுக்கு ஒருமுறை கூட பயணம் செய்தது கிடையாது. எனது புகைப்படம் இந்தியாவில் வைரலாக பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியர்கள் பலர் என்னை சமூக வலைதளங்களில் பின்தொடர்கின்றனர். அவர்களை வரவேற்கிறேன். நான் இப்போது மாடலிங் அழகியாக பணியாற்றவில்லை. சிகை அலங்கார நிபுணராக பணியாற்றி வருகிறேன். இவ்வாறு லாரிசா நெரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x