Published : 07 Nov 2025 10:54 AM
Last Updated : 07 Nov 2025 10:54 AM
பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸும் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
பிஹாரில் இரண்டாம் கட்டமாக வரும் 11-ம் தேதி 122 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அரரியா சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் 15 ஆண்டுகள் ஆட்சி நடத்தியது. அன்றைய காட்டாட்சியில் பிஹாரின் வளர்ச்சி பூஜ்ஜியமாக இருந்தது. புதிய நெடுஞ்சாலைகள், பாலங்கள் கட்டப்படவில்லை. புதிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படவில்லை.
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு பிஹார் மாநிலம் அபரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் ஏராளமான விரைவு சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஏராளமான புதிய பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன. புதிதாக 4 மத்திய பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.
பிஹார் மாநில வளர்ச்சிக்கு ஊடுருவல்காரர்கள் மிகப்பெரிய தடையாக உள்ளனர். நாட்டில் இருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்ற மத்திய அரசும் பிஹார் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளமும் காங்கிரஸும் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது ஊடுருவல்காரர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. ஆனால் அவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவும் யாத்திரை மேற்கொண்டனர். ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரர்கள் பிஹாருக்குள் பின்வாசல் வழியாக நுழைவார்கள்.
சத்தி மையா வழிபாடு, ஒரு நாடகம் என்று காங்கிரஸ் தலைமை குற்றம் சாட்டியது. அயோத்தி ராமர் கோயிலுக்கு காங்கிரஸ் மேலிட தலைவர்கள் ஒருமுறை கூட செல்லவில்லை. உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்றபோது காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.
வாக்கு வங்கி அரசியல் காரணமாக ராஷ்டிரிய ஜனதா தளமும் (ஆர்ஜேடி), காங்கிரஸும் பகவான் ராமரை வெறுக்கின்றன. நிஷாத் ராஜ், ஷப்ரி மாதா, மகரிஷி வால்மீகி கோயில்களுக்கு கூட ஆர்ஜேடி, காங்கிரஸ் தலைவர்கள் செல்வது கிடையாது. இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களையும் அவர்கள் வெறுக்கின்றனர் என்பது தெளிவாகிறது.
மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை முன்னிறுத்த காங்கிரஸ் விரும்பவில்லை. இதன்காரணமாக ஆர்ஜேடி, காங்கிரஸுக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சார கூட்டங்களில் மக்கள் பெருந்திரளாக கூடுகின்றனர். இதன்மூலம் எங்கள் கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது. பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT