Published : 06 Nov 2025 05:44 PM
Last Updated : 06 Nov 2025 05:44 PM
இந்திய வாக்காளர் பட்டியலில் பிரேசிலியப் பெண் ஒருவரின் புகைப்படம் 22 வெவ்வேறு பெயர்களில் இடம்பெற்றுள்ளதாக ராகுல் காந்தி கூறி இருந்த நிலையில், அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்ற பெண் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
லாரிசா நேரி என்ற அந்தப் பெண் தனது வீடியோவில், "நண்பர்களே, அவர்கள் என்னுடைய பழைய புகைப்படத்தைப் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் அது ஒரு பழைய புகைப்படம். அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டபோது எனக்கு 18 அல்லது 20 வயது இருக்கும். இந்த விவகாரம் தேர்தல் அல்லது வாக்கு அளிப்பது பற்றியதா என்பது குறித்து எனக்குத் தெரியாது. என்னை இந்தியராக சித்தரித்து மக்களை ஏமாற்றுகிறார்கள். நண்பர்களே, என்ன இது பைத்தியக்காரத்தனம்? நாம் எந்த உலகில் வாழ்கிறோம்?
உண்மையில் நான் மாடல் அல்ல. எனது நண்பருக்கு உதவுவதற்காக நான் அந்தப் புகைப்படத்துக்காக போஸ் கொடுத்தேன். மேதியஸ் ஃபெரெரோ என்ற அந்த புகைப்படக் கலைஞர் எனது புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டார். நானும் அனுமதி கொடுத்தேன். அந்தப் புகைப்படம்தான் தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனது புகைப்படம் வைரலானதை அடுத்து ஒரு பத்திரிகையாளர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களை நேர்காணல் செய்ய விரும்புவதாகக் கூறினார். நான் அவருக்கு பதில் அளிக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநில முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 25 லட்சம் வாக்குகளை திருடி பாஜக ஆட்சியைப் பிடித்ததாக ஆதாரங்களை வெளியிட்டு குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் சேர்ந்து, தேர்தல் ஆணையம் சதி செய்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், “வாக்காளர் பட்டியலில் ஒரு பெண்ணின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. பல்வேறு இடங்களில், பல்வேறு பெயர்கள் மற்றும் விவரங்களுடன் அந்தப் பெண்ணின் புகைப்படம் உள்ளது. சீமா, ஸ்வீட்டி, சரஸ்வதி, ராஷ்மி, வில்மா என்ற பெயர்களில் 22 முறை அந்தப் பெண் வாக்களித்துள்ளார். ஆனால், அவர் இந்தியர் அல்ல, பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாத்யூஸ் பெரோரோ. அந்தப் பெண்ணின் ஒரே புகைப்படம் 22 பெயர்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT