Published : 06 Nov 2025 12:14 PM
Last Updated : 06 Nov 2025 12:14 PM
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 27.65% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது, இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். காலை 9 மணி நிலவரப்படி 13.13% வாக்குகள் பதிவான நிலையில், 11 மணி நிலவரப்படி 27.65% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில் 30.37% வாக்குகள் பதிவாகி உளளன. தலைநகர் பாட்னாவில் 23.71% வாக்குகள் பதிவாகி உள்ளன. லக்கிசராய் மாவட்டத்தில் 30.32% வாக்குகளும், கோபால் கஞ்ச் மாவட்டத்தில் 30.04% வாக்குகளும் பதிவாகி உள்ளன.
பக்ஸர் மாவட்டத்தில் 28.02%, போஜ்பூர் மாவட்டத்தில் 26.76%, தர்பங்காவில் 26.07%, காகாரியாவில் 28.96%, மாதேபுராவில் 28.46%, முங்கெரில் 29.68%, முசாபர்பூரில் 29.66%, நாளந்தாவில் 26.86%, சஹார்சாவில் 29.68%, சமஸ்திபூரில் 27.92%, சரணில் 28.52%, ஷேக்புராவில் 26.04%, சிவானில் 27.09%, வைஷாலியில் 28.67% வாக்குகள் பதிவாகி உள்ளன.
முதல் கட்ட தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் மற்றும் மாநில துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா, 10-க்கும் மேற்பட்ட பாஜக மற்றும் ஜேடியு அமைச்சர்கள் களத்தில் உள்ளனர். இளம் நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் (பாஜக-அலிகஞ்ச் தொகுதி) மற்றும் போஜ்புரி சூப்பர் ஸ்டார்கள் கேசரி லால் யாதவ் (ஆர்ஜேடி - சாப்ரா தொகுதி) மற்றும் ரித்தேஷ் பாண்டே (ஜன் சுராஜ் கட்சி - கர்கஹார் தொகுதி) ஆகியோரும் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243-ல் 121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்காக பிரதமர் மோடி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி, காங்கிரஸின் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. 18 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த தொகுதிகளில் மொத்தம் 122 பெண்கள் உள்ளிட்ட 1,314 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். வாக்காளர்கள் எண்ணிக்கை 3.75 கோடி. மொத்தம் 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2020 தேர்தலில், 121 -ல் மகா கூட்டணி 61 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 59 மற்றும் லோக் ஜன சக்தி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்தது. இந்த 121 தொகுதிகளில் மெகா கூட்டணியின் தலைமைக் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மட்டும் 42 தொகுதிகளில் வென்றிருந்தது. இக்கூட்டணியின் இதர உறுப்பினர்களான காங்கிரஸ் 8 மற்றும் இடதுசாரிகள் 11 தொகுதிகளைப் பெற்றன. அதேபோல், பாஜக 32 மற்றும் ஜேடியு 23 தொகுதிகளில் 2020 தேர்தலில் வெற்றி பெற்றன என்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT