Published : 06 Nov 2025 11:48 AM
Last Updated : 06 Nov 2025 11:48 AM
பாட்னா: “பிஹாரில் நவம்பர் 14 ஆம் தேதி ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படும். புதிய அரசாங்கத்தை அமைக்க மாற்றத்தை கொண்டு வாருங்கள்” என மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ், இன்று தேர்தல் நடைபெறும் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த சூழலில், தேஜஸ்வி யாதவ் இன்று குடும்பத்தினருடன் தனது வாக்கினை பதிவு செய்தார். மேலும், அவர் பிஹாகார் முன்னாள் முதல்வரும், தனது தந்தையுமான லாலு பிரசாத் யாதவ், தாய் ராப்ரி தேவி மற்றும் மனைவி ராஜ்ஸ்ரீ யாதவ் உள்ளிட்டோருடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
வாக்களித்த பின்னர் பேசிய அவர், "பிஹார் மக்கள் தங்கள் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் மனதில் கொண்டு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். வேலைவாய்ப்பு, கல்வி, நல்ல சுகாதார சேவைக்காக வாக்களியுங்கள். நாங்கள் வெற்றி பெறப் போகிறோம், பிஹார் வெற்றி பெறப் போகிறது. நவம்பர் 14 ஆம் தேதி ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படும். நவம்பர் 14 ஆம் தேதி மாற்றம் ஏற்படும். புதிய அரசாங்கத்தை அமைக்க மாற்றத்தை கொண்டு வாருங்கள்" என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.
முன்னதாக தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட வீடியோவில், "பிஹாரின் எதிர்கால விதி, நீங்கள் அழுத்தும் ஒற்றை பொத்தானைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் மனிதகுலத்தின் நலனுக்காக நீங்கள் வாக்களிப்பது மிகவும் அவசியம்.
முதல் முறையாக வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும், குறிப்பாக ஜென் ஸி, தாய்மார்கள் மற்றும் சகோதரிகள், வர்த்தகர்கள், விவசாயிகள், பிற மாநிலங்களில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர், பொதுமக்கள், பயிற்சி மூலம் வேலைக்குத் தயாராகும் மாணவர்கள், தங்கள் நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் ஒவ்வொரு நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் பிஹாரில் உள்ள ஒவ்வொரு தகுதியுள்ள வாக்காளருக்கும் நான் வைக்கும் வேண்டுகோள், எந்த சூழ்நிலையிலும் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
நீங்கள் அனைவரும் உங்கள் வாக்கைப் பயன்படுத்தும்போதுதான் பிஹாரின் நிலை செழிப்பாக இருக்கும். உங்கள் வாக்களிப்பு பிஹாரின் முன்னேற்றத்திற்கு சரியான வாய்ப்பை உருவாக்கும்" என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT