Last Updated : 06 Nov, 2025 10:39 AM

 

Published : 06 Nov 2025 10:39 AM
Last Updated : 06 Nov 2025 10:39 AM

பிஹார் முதல் கட்ட வாக்குப் பதிவும், தேர்தல் கள நிலவரமும் - ஒரு பார்வை

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இன்று முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதன் 121 தொகுதிகளில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியிடம் (என்டிஏ) 59, மெகா கூட்டணியிடம் 61 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி, 121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

18 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த தொகுதிகளில் மொத்தம் 122 பெண்கள் உள்ளிட்ட 1,314 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். வாக்காளர்கள் எண்ணிக்கை 3 கோடியே 75 லட்சத்து 13 ஆயிரத்து 302. இவர்களுக்காக மொத்தம் 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2020 தேர்தலில், 121-ல் மெகா கூட்டணி 61, என்டிஏ 59 மற்றும் லோக் ஜன சக்தி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்தது. எனவே, இந்த முதல்கட்ட தேர்தல் இரண்டு கூட்டணிகளுக்கும் மிக முக்கியமானதாக உள்ளது.

முதல் முறையாக போட்டியிடும் பிராசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கூட்டணிக்கும் இன்றைய வாக்குப்பதிவு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. கடந்த முறை, இரண்டு கூட்டணிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சில ஆயிரம் மட்டுமே. இந்த சிறிய வித்தியாசத்தால் மெகா கூட்டணி ஆட்சி அமைய வெறும் 12 தொகுதிகள் குறைந்தன.

சிராக் பாஸ்வானின் எல்ஜேபி தனித்து போட்டியிட்டிருந்தது. அக்கட்சியின் ஒரு எம்எல்ஏவும் பிறகு முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் (ஜேடியு) இணைந்தார். அதேநேரம், ஆளும் ஜேடியுவின் கணிசமான வாக்குகளை எல்ஜேபி பிரித்திருந்தது. இந்த முறை எல்ஜேபி என்டிஏவுடன் இணைந்ததால் இக்கூட்டணிக்கு பிரச்சினை இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 121 தொகுதிகளில் மெகா கூட்டணியின் தலைமைக் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மட்டும் 42 தொகுதிகளில் வென்றிருந்தது. இக்கூட்டணியின் இதர உறுப்பினர்களான காங்கிரஸ் 8 மற்றும் இடதுசாரிகள் 11 தொகுதிகளைப் பெற்றன. அதேபோல், பாஜக 32 மற்றும் ஜேடியு 23 தொகுதிகளைப் பெற்றன.

இந்த முறையும் 121 தொகுதிகளில் இரண்டு கூட்டணி கட்சிகளும் 16 நாட்களாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் பிரச்சாரம் செய்திருந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களும் தொடர்ந்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

பாஜக ஆளும் உத்தர பிரதேசம், டெல்லி மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும் என்டிஏவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தனர். தனது வயது மூப்பு காரணமாக முதல்வர் நிதிஷ் பிரச்சாரங்களில் அதிகம் பேசவில்லை. சாலையோரப் பிரச்சாரமாக கைகளை ஆட்டிவிட்டுச் சென்று விட்டார்.

இவர்களுக்கு சவால் விடும் வகையில் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவும் தொடர் பிரச்சாரத்தில் இருந்தார். இறுதிநாள் பிரச்சாரத்தில் லாலு மட்டும் கலந்துகொண்டார். கடைசி மூன்று நாள் பிரச்சாரத்தில் காங்கிரஸின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி, தேஜஸ்வியுடன் மேடை ஏறினார். மற்றொரு முக்கிய முகமான பிரியங்கா வதேராவும் பெண் வாக்காளர்களைக் கவர முயன்றார். இந்த தேர்தலில், உடல்நலக் குறைவு காரணமாக சோனியா காந்தி பிரச்சாரம் செய்யவில்லை.

முதல்கட்ட வாக்குப் பதிவில் வீசும் அலை, இரண்டாம் கட்டத்துக்கும் வீசி ஆட்சி அமைக்கும் கூட்டணியை முடிவு செய்கிறது. ஆர்ஜேடியின் தலைவரான தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். இது, மெகா கூட்டணிக்கு சாதகம் எனக் கருதப்படுகிறது.

இதை விமர்சித்த பிரதமர் மோடி, ‘காங்கிரஸின் காதுகளில் துப்பாக்கியை வைத்து ஆர்ஜேடி தனது கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகி விட்டது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

பிஹாரின் சீமாஞ்சல் பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர். இப்பகுதியில் முஸ்லிம்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் தொகுதிகள் 36 உள்ளன.

அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி மெகா கூட்டணியின் வாக்குகளைப் பிரிக்க வாய்ப்பு அதிகம் உள்ளன. முஸ்லிம்களின் வாக்குகளால் கடந்த 2020 தேர்தலில் ஒவைசி 5 எம்எல்ஏக்களை பெற்றார். இந்த முறை அவரது வேட்பாளர்கள் 15 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். ஜன் சுராஜின் பிரசாந்த் கிஷோர் இரண்டு கூட்டணிகளின் வாக்குகளையும் பிரிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளன.

பிஹாரில் மொத்தம் 243 தொகுதிகளின் உள்ளன. 122 தொகுதிகளி வரும் 11-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. வரும் 14-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x