Published : 06 Nov 2025 08:07 AM
Last Updated : 06 Nov 2025 08:07 AM
மலப்புரம்: கேரளாவில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தாய், அவரது ஆண் நண்பருக்கு 180 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன் கணவர் மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
அப்போது, வேறு ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தப் பெண் கணவரை விட்டுப் பிரிந்து ஆண் நண்பருடன் மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் வசித்து வந்துள்ளார். தனது பெண் குழந்தையையும் தன்னுடன் தங்க வைத்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், அந்தப் பெண்ணின் ஆண் நண்பர், 12 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். அத்துடன் ‘‘இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது. மீறி சொன்னால், உன்னுடைய மூளையில் வைத்துள்ள சிப் மூலம் எங்களுக்கு தெரிந்துவிடும்’’ எனக் கூறி தனது மகளை மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் குழந்தைகள் உதவி மையம், காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் போலீஸார் அந்த சிறுமியை மீட்டு குழந்தைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். மேலும் சிறுமியின் தாய் மற்றும் அவரது ஆண் நண்பரை கைது செய்த போலீஸார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி அஷ்ரப், சிறுமியின் தாய் மற்றும் அவரது ஆண் நண்பர் ஆகிய இருவரும் குற்றவாளி என அறிவித்தார். பின்னர் இருவருக்கும் தலா 180 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அத்துடன் ரூ.11.7 லட்சம் அபராதமும் விதித்தார். இந்தப் பணத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT