Published : 05 Nov 2025 07:14 PM
Last Updated : 05 Nov 2025 07:14 PM
புதுடெல்லி: பிஹாரில் வேலைவாய்ப்பின்மை, இடப்பெயர்வு, குண்டர்களின் ஆட்சிக்கு முடிவுகட்ட வாக்காளர்கள் பாஜக - ஜேடியு கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பிஹாரில் பத்துக்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வு வினாத்தாள்கள் கசிந்து மோசடிகள் நடந்துள்ளன. இதனால், லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் பாழடைந்தது. நீதி கோரி அவர்கள் வீதிகளுக்கு வந்தபோது அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தோல்வியுற்ற பொருளாதார மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கைகளால் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் சொந்த மாநிலத்தைவிட்டு வெளியேறி, தொழிலாளர்களாக வேறு மாநிலங்களில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மத்திய அரசின் இ-ஷ்ரம் இணையதள தரவுகளின்படி 3.18 கோடி பிஹாரிகள் பிற மாநிலங்களில் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள்.
பாஜக - ஜேடியு கூட்டணி பிஹாரை நாட்டின் ஏழ்மையான மாநிலமாக மாற்றியுள்ளது. 64% மக்கள் ஒரு நாளுக்கு ரூ. 67 மட்டுமே வருமானமாகப் பெறுகிறார்கள். பிஹாரில் தொழில்கள் சரிந்துவிட்டன. சொந்தமாக தொழில் நடத்தி வந்த பல தொழிலதிபர்கள்கூட பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் 11 தொழிலதிபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பிஹாரில் குண்டர்களின் தொழில் செழித்து வளர்கிறது. சராசரியாக ஒவ்வொரு நாளும் 8 கொலைகள், 33 கடத்தல்கள் மற்றும் 136 கொடூர குற்றங்கள் நடக்கின்றன. ரூ. 70,000 கோடி மதிப்புள்ள ஊழலை சிஏஜி கண்டுபிடித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ஊழல் காரணமாக 27 பெரிய பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.
பிஹாரின் சுகாதார அமைப்பு சீர்குலைந்துள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது. 60% ஊழியர்கள் பற்றாக்குறை, 86% சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை, 93% மருத்துவமனை படுக்கைகள் பற்றாக்குறை இருப்பதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
என்ஜிடி அறிக்கையின்படி, கங்கை நதியின் மாசு அதிகரித்துள்ளது. 13 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 7 மட்டுமே இயங்குகின்றன. அவைகூட தரமானதாக இல்லை. மதுவிலக்கு என்ற போர்வையில் சட்டவிரோத மது சாம்ராஜ்ஜியம் உருவாகியுள்ளது. 2016 முதல் கள்ளச்சாராயத்தால் 190 பேர் உயிரிழந்துள்ளனர்.
பள்ளிக்கல்வி முறை சீர்குலைந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக இடைநிற்றல் விகிதம் 26% ஆக உள்ளது. 1,16,529 பள்ளிகளில் மின்சாரம் இல்லை, 2,637 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார், 117 பள்ளிகளில் மாணவர்களே இல்லை. உயர்கல்வியும் மோசமான நிலையில் உள்ளது. மொத்த சேர்க்கை விகிதம் 17.1% ஆக உள்ளது. இது நாட்டிலேயே மிகக் குறைவு. ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 7 கல்லூரிகள் மட்டுமே உள்ளன. தேசிய சராசரி 30 உள்ளது.
விவசாயிகளின் வருமானம் முற்றிலுமாக வறண்டுவிட்டது. விவசாய உள்கட்டமைப்புக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 3,980 கோடியில் ரூ. 915 மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. பிஹாரின் மகள்கள் கந்துவட்டி கொடுமையில் சிக்கித் தவிக்கின்றனர். மிரட்டி பணம் பறிக்கும் மாபியாக்களின் பயங்கரம் அதிகரித்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மிகப் பெரிய மோசடிகள் நடந்துள்ளன. போலி வருகைப்பதிவு, போலி புகைப்படங்கள், இறந்தவர்களின் பெயரில் பணம் செலுத்துதல் போன்றவை நடக்கின்றன. அதானிக்கு ஒரு ஏக்கர் ஒரு ரூபாய் வீதம் ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் ஊழல் பரவலாக உள்ளது. பொருளாதார குற்றப் பிரிவு மற்றும் கண்காணிப்புத் துறையின் கூற்றுப்படி 4,200 அரசு அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கின்றனர். பிஹாரில் பாஜக - ஜேடிய கூட்டணி தோற்கடிக்கப்பட்டால் வேலையின்மை, இடப்பெயர்வு, ஊழல், குண்டர்களின் அராஜகம் ஆகியவை தானமாக முடிவுக்கு வரும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT