Published : 05 Nov 2025 06:47 AM
Last Updated : 05 Nov 2025 06:47 AM
பரிதாபாத்: தலைநகர் டெல்லியின் எல்லையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பல்லப்காரில் பயிற்சி வகுப்பு முடித்து மாணவி ஒருவர் தனது இரண்டு தோழிகளுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியில் இளைஞர் ஒருவர் கையில் பையுடன் இருசக்கர வாகனத்தில் காத்திருந்தார். அவரின் அருகே அந்த மாணவி வந்ததும் பின்தொடர்ந்து சென்ற அந்த இளைஞர் தனது பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மாணவியை நோக்கி சுட்டார்.
இதில், ஒரு குண்டு அந்த மாணவியின் தோளிலும், மற்றொன்று அவரது வயிற்றிலும் பாய்ந்தது. இதையடுத்து, வலியால் கதறித் துடித்த அந்த மாணவியை உடன் வந்த அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
படுகாயமடைந்த அந்த பெண்ணுக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி மீது இளைஞர் துப்பாக்கியால் சுட்ட சிசிடிவி பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.
இதுகுறித்து காவல் துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “முதல்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய ஜதின் மங்கலாவை அந்த மாணவிக்கு முன்பே தெரிந்துள்ளது. அவரை தேடி வருகிறோம். தாக்குதலுக்கு பயன்படுத்திய துப்பாக்கியை கைப்பற்றி அந்த இளைஞர் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளோம்’’ என்றார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி கூறுகையில், “வாரியத் தேர்வுக்கு அவள் தயாராகி வருகிறாள். தினமும் ஒரே வழியில் வீடு திரும்பும் அவரை நோட்டமிட்டு பைக்கில் காத்திருந்து ஜதின் மங்கலா இந்த தாக்குதலை நடத்தி உள்ளார். ஏற்கெனவே பலமுறை பின்தொடர்ந்து அவர் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரது குடும்பத்தாரிடமும் தெரிவித்தோம். ஜதின் மங்கலாவின் தாயார் வருத்தம் தெரிவித்து இதுபோன்று நடக்காது என்று உறுதி அளித்தார். ஆனால், மறுநாளே ஜதின் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT