Published : 05 Nov 2025 01:08 AM
Last Updated : 05 Nov 2025 01:08 AM
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள மாரத்தஹள்ளியை சேர்ந்தவர் மருத்துவர் மகேந்திர ரெட்டி (34). இவருக்கும் பெல்லாரியை சேர்ந்த மருத்துவரான கிருத்திகா ரெட்டிக்கும் (28) கடந்த 2024-ம் ஆண்டு திருமணமானது. கிருத்திகா ரெட்டிக்கு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதையடுத்து போலீஸார் கிருத்திகாவின் பிரேதப் பரிசோதனையில் அவரது உடலில் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரி,உறுப்புகள் சிலவற்றை தடயவியல் சோதனைக்கு அனுப்பினர். அதில் பிரபோல் எனப்படும் அனஸ்தீசியா மயக்க மருந்து அளவுக்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மகேந்திர ரெட்டி மீது மாரத்தஹள்ளி போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து, கடந்த அக்டோபர் 14-ம் தேதி அவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்டு கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
மகேந்திர ரெட்டியின் செல்போனை ஆராய்ந்தனர். கொலை நடந்த 2 வாரங்களுக்கு பிறகு அவர் தன்னுடன் மருத்துவ கல்லூரியில் பயின்றவரும் அவரது முன்னாள் காதலியுமான பெண் மருத்துவருக்கு, ‘‘நான் உனக்காகத்தான் என் மனைவியைக் கொன்றேன்’’ என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
சம்பந்தப்பட்ட பெண் இவரை வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் பிளாக் செய்திருந்ததால், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலி மூலமாக குறுஞ்செய்தி அனுப்பியது தெரியவந்தது.
இதுதவிர மகேந்திர ரெட்டி வாட்ஸ் அப், டெலிகிராம் செயலிகள் மூலம் 4 பெண் தோழிகளுக்கு இதே போன்ற குறுஞ்செய்தியை அனுப்பியதையும் போலீஸார் கண்டறிந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT