Published : 05 Nov 2025 12:56 AM
Last Updated : 05 Nov 2025 12:56 AM
புதுடெல்லி: வாரிசு அரசியலால் இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமான புராஜெக்ட் சிண்டிகேட், செக் குடியரசை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் 'இந்திய அரசியல் - குடும்ப வணிகம்' என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கட்டுரையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கிராம பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை குடும்ப அரசியல் வியாபித்து பரவி இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இந்திய அரசியலில் ஜவஹர்லால் நேரு குடும்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாட்டின் முதல் பிரதமராக நேரு பதவியேற்றார்.
இதன் பிறகு அவரது மகள் இந்திரா காந்தி பிரதமரானார். அடுத்து அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமராக பதவி வகித்தார். தற்போது நேரு குடும்பத்தை சேர்ந்த ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். அவரது தங்கை பிரியங்கா காந்தி எம்.பி.யாக உள்ளார். இந்தியாவின் ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வாரிசு அரசியல் நீடித்து வருகிறது.
ஒடிசாவில் பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக், மகாராஷ்டிராவில் சிவசேனா உத்தவ் அணியின் தலைவர் உத்தவ் தாக்கரே, உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் வாரிசு அரசியலின் உதாரணங்களாக உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் அப்துல்லா குடும்பத்தினரும் முப்தி குடும்பத்தினரும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பஞ்சாபில் சிரோமணி அகாலிதளத்தில் வாரிசு அரசியல் தொடர் கதையாக நீடிக்கிறது. அந்த கட்சியின் தலைவர் பிரகாஷ் சிங் பாதலுக்கு பிறகு அவரது மகன் சுக்பீர் சிங் தற்போது கட்சி தலைவராக பதவி வகிக்கிறார். தெலங்கானாவின் பிஆர்எஸ் கட்சியில் வாரிசு அரசியல் போர் நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவின் மகனும் மகளும் கட்சி தலைமையை கைப்பற்ற நேரடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கருணாநிதி குடும்பத்தினர் திமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர். கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலின் தற்போது தமிழக முதல்வராக பதவி வகிக்கிறார். கருணாநிதியின் பேரன் (உதயநிதி) கட்சியின் அடுத்த வாரிசாக முன்னிறுத்தப்பட்டு வருகிறார். நாடு முழுவதும் 11 மத்திய அமைச்சர்கள், 9 முதல்வர்கள் வாரிசு அரசியலின் உதாரணங்களாக விளங்குகின்றனர்.
வாரிசு அரசியலால் இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. திறமையை புறந்தள்ளி வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிப்பதால் ஆட்சி நிர்வாகத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. வாரிசு அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண அடிப்படை சீர்த்திருத்தங்கள் அவசியமாகிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT