Published : 02 Nov 2025 05:49 PM
Last Updated : 02 Nov 2025 05:49 PM
சென்னை: ‘மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை அறிவிக்க காங்கிரஸ் விரும்பவில்லை. ஆனால் ஆர்ஜேடி, காங்கிரஸின் தலையில் ஒரு துப்பாக்கியை வைத்து முதல்வர் வேட்பாளரை அறிவிக்க கட்டாயப்படுத்தினர்’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிஹாரின் அர்ராவில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, “ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பிறகு நாடு பெருமைப்பட்டது, ஆனால் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளமும் அதை விரும்பவில்லை. பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் நடந்தபோது, காங்கிரஸ் அரச குடும்பம் தூக்கமில்லாத இரவுகளைக் கழித்தது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற உறுதிமொழியுடன் உள்ளது. மறுபுறம், காங்கிரஸும் ஆர்ஜேடியும் தங்களுக்குள் மோதி வருகின்றன. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடுவுக்கு ஒரு நாள் முன்பு, பிஹாரில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஒரு குண்டர் விளையாட்டு நடந்தது. மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை அறிவிக்க காங்கிரஸ் விரும்பவில்லை. ஆனால் ஆர்ஜேடி காங்கிரஸின் தலையில் ஒரு துப்பாக்கியை வைத்து முதல்வர் வேட்பாளரை அறிவிக்க அவர்கள் கட்டாயப்படுத்தினர்.
ஆர்ஜேடிக்கும், காங்கிரஸுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. தேர்தல் அறிக்கை குறித்து காங்கிரஸுடன் ஆலோசிக்கப்படவில்லை, பிரச்சாரம் குறித்தும் கேட்கப்படவில்லை. தேர்தலுக்கு முன்பு இவ்வளவு வெறுப்பு இருந்தால், அவர்கள் பின்னர் ஒருவருக்கொருவர் தலையை உடைக்கத் தொடங்குவார்கள். நினைவில் கொள்ளுங்கள், இத்தகையவர்களால் பிஹாரின் முன்னேற்றத்திற்காக உழைக்க முடியாது.
ஆர்ஜேடியின் காட்டாட்சி என்பது பிஹாரை வெறுமையாக்கிய இருள். ஆர்ஜேடி-யின் காட்டாட்சி துப்பாக்கி, கொடுமை, கசப்பு, மூடநம்பிக்கை, தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் ஆகியவற்றால் அடையாளம் காணப்படுகிறது. நிதிஷ் குமாரும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கமும் பிஹாரை அந்தக் கடினமான சகாப்தத்திலிருந்து மீட்டெடுத்துள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT