Published : 01 Nov 2025 08:31 AM
Last Updated : 01 Nov 2025 08:31 AM
புதுடெல்லி: ‘‘பிஹாரில் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்’’ என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
பிஹாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 6 மற்றும் 11-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 14-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (என்டிஏ) ஆர்ஜேடி - காங்கிரஸ் மெகா கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், என்டிஏ கூட்டணி தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில், முதல்வர் நிதிஷ்குமார் என்டிஏ தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் ஜிதன் ராம் மாஞ்சி, சிராக் பஸ்வான் மற்றும் ஆர்எல்பி தலைவர் உபேந்திர குஷ்வாகா ஆகியோர் உடன் இருந்தனர்.
என்டிஏ தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
>ஒரு கோடி பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர்களுக்காக மெகா திறன் மையங்கள் அமைக்கப்படும்.
>விளையாட்டு நகரம் அமைக்கப்படும். மாவட்டந்தோறும் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். 100 எம்எஸ்எம்இ பூங்கா, 50 ஆயிரம் புதிய காட்டேஜ் தொழிற்சாலைகள், சிப்செட், செமி கண்டக்டர், உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் உருவாக்கப்படும்.
>பெண்களுக்கு அதிகாரம் வழங்க 22 லட்சம் பெண்களுக்கு உதவி செய்ய திட்டம், ஒரு கோடி பெண்களை லட்சாதிபதியாக்கும் திட்டம். பெண் தொழில் முனைவோரை கோடீஸ்வரர்களாக்கும் திட்டம்.
>கிஸான் சம்மான் நிதி ஆண்டுக்கு ரூ.6,000-ல் இருந்து ரூ.9,000 ஆக உயர்த்தப்படும்.
>பட்டியலின மாணவர்களுக்கு ஒவ்வொரு மண்டலத்திலும் உறைவிட பள்ளிகள் ஏற்படுத்த ரூ.9 லட்சம் முதலீடு. உயர்க் கல்வி பயிலும் பட்டியலின மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் உயர்க்கல்வி பயில ரூ.10 லட்சம் வரை உதவித்தொகை. ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி, மதிய உணவு, 50 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும், இலவச ரேஷன்,
>125 யூனிட் மின்சாரம் இலவசம். அனைத்து வகை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும்.
இதுபோன்ற பல திட்டங்கள் என்டிஏ தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ஜேடி - காங்கிரஸ் தலைமையலான மெகா கூட்டணி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT