Last Updated : 31 Oct, 2025 04:42 PM

1  

Published : 31 Oct 2025 04:42 PM
Last Updated : 31 Oct 2025 04:42 PM

என்டிஏ தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் நிதிஷை பேச அனுமதிக்கவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் முதல்வர் நிதிஷ் குமாரை பேச அனுமதிக்கவில்லை என்றும், இது பிஹார் மற்றும் பிஹாரிகளுக்கு அவமானம் என்றும் காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.

பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜிதன் ராம் மஞ்சி, சிராக் பாஸ்வான் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று காலையில் வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சி ஒரு நிமிடத்துக்குள் நடந்து முடிந்தது. அதன் பின்னர் அனைவரும் அந்த இடத்தை விட்டு உடனடியாக வெளியேறினர்.

தேர்தல் பணிகள் இருப்பதால் தலைவர்கள் உடனடியாக மேடையில் இருந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி மட்டும் அங்கேயே இருந்து பத்திரிகையாளர்களின் சில கேள்விகளுக்கு பதிலளித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட், “ தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வு 26 வினாடிகள் மட்டுமே நடந்தது. ஏனெனில், அந்தக் கூட்டணியின் தலைவர்கள் தங்கள் 20 ஆண்டு கால ஆட்சி குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள பயந்தனர்.

தேர்தல் அறிக்கை வெளியீட்டின்போது முதல்வர் நிதிஷ் குமார் பேச அனுமதிக்கப்படவில்லை. ஒருவேளை அவர் இதைப் பற்றி பேசும் நிலையில் இல்லையா என்று தெரியவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை பொய்களின் சரமாகும். இதை எங்கள் பொதுப் பேரணிகளில் வெளிப்படுத்துவோம். மேலும் 20 ஆண்டு கால தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனைகள் குறித்து கேள்வி எழுப்புவோம்” என்றார்

அசோக் கெலாட்டின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி. அகிலேஷ் பிரசாத் சிங், "நிதிஷ் குமார் தேர்தல் அறிக்கை குறித்து பேச அனுமதிக்கப்படவில்லை. இது பிஹார் மற்றும் பிஹாரிகளுக்கு அவமரியாதை" என்று கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.9000, நான்கு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள், மாநிலத்தில் ஏழு சர்வதேச விமான நிலையங்கள், ஏழு விரைவுச் சாலைகள், 10 தொழில்துறை பூங்காக்கள், தொடக்க கல்வி முதல் பிஜி வரை இலவச தரமான கல்வி மற்றும் உயர் கல்வி பயிலும் பட்டியல் சமூக மாணவர்களுக்கு மாதத்திற்கு ரூ.2,000 உதவித் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x