Last Updated : 31 Oct, 2025 04:33 PM

5  

Published : 31 Oct 2025 04:33 PM
Last Updated : 31 Oct 2025 04:33 PM

ஆர்எஸ்எஸ் அமைப்பை பிரதமர் மோடி தடை செய்ய வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே. உடன் காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ்.

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட வேண்டும் என்று நான் வெளிப்படையாகவே கூறுகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "நாட்டின் தற்போதைய சட்டம் - ஒழுங்கு நிலைக்கு பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும்தான் காரணம். சர்தார் வல்லபாய் படேல் முன்வைத்த கருத்துகளை பிரதமர் நரேந்திர மோடி உண்மையிலேயே மதிக்கிறார் என்றால் அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும். இது எனது தனிப்பட்டக் கருத்து. இதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன்.

காந்தி இறந்ததை அடுத்து ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டது. இது தொடர்பாக ஜனசங்கத்தின் தலைவர் ஷியாம பிரசாத் முகர்ஜிக்கு, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேல் ஒரு கடிதம் எழுதி இருந்தார். பிப்ரவரி 4, 1948 தேதியிட்ட அந்த கடிதத்தில், 'காந்திஜியின் மரணத்தை அடுத்து, ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மகிழ்ச்சியடைந்து இனிப்பு விநியோகத்தினர். இதனால், அவர்கள் மீது எதிர்ப்பை மேலும் அதிகரித்தது.

இந்த சூழ்நிலையில், ஆர்எஸ்எஸ் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை. ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகாசபையின் செயல்பாடுகளால் நாட்டில் உருவாக்கப்பட்ட சூழல் காந்திஜியின் படுகொலைக்கு வழிவகுத்தது என்பதை அறிக்கை நிரூபிக்கிறது' என்று தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கருக்கும் படேல் எழுதினார்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் உரைகள் வகுப்புவாதத்தின் விஷத்தால் நிரம்பியிருந்தன என்று சர்தார் படேல் கூறுவார். ஆர்.எஸ்.எஸ் காரணமாகத்தான் காந்திஜி படுகொலை செய்யப்பட்டார். காந்திஜியைக் கொன்ற அதே மக்கள் இப்போது காங்கிரஸைக் கேள்வி கேட்கிறார்கள். சர்தார் வல்லபாய் படேல் நாட்டை ஒன்றிணைத்த ஒரு தலைவர். அடிப்படை உரிமைகள் குறித்த தனது கருத்துக்களை அரசியலமைப்புச் சபையில் முன்வைத்து அரசியலமைப்பில் அவற்றுக்கு ஒரு இடத்தைப் பெற்றுத் தந்தவர் படேல்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு குஜராத்தின் ஏக்தா நகரில் உள்ள அவரது பிரம்மாண்ட சிலைக்கு பிரதமர் மோடி இன்று மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து படேல் சிலை முன்பாக முதன்முறையாக நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, "சுதந்திரத்திற்குப் பிறகு, 550க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் சாத்தியமற்ற பணியை சர்தார் படேல் சாத்தியமாக்கினார். ஒரே இந்தியா, சிறந்த இந்தியா என்ற யோசனை படேலுக்கு மிக முக்கியமானது.

சர்தார் வல்லபாய் படேல் மற்ற சமஸ்தானங்களை இணைத்தது போல், முழு காஷ்மீரையும் ஒன்றிணைக்க விரும்பினார். ஆனால் நேரு அவரது விருப்பத்தை தடுத்தார். இதனால் காஷ்மீர் பிரிக்கப்பட்டது, தனி அரசியலமைப்பு மற்றும் தனி கொடி வழங்கப்பட்டது. காங்கிரஸின் இந்த தவறு காரணமாக நாடு பல பத்தாண்டுகளாக பாதிக்கப்பட்டது” என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x