Last Updated : 30 Oct, 2025 05:45 PM

1  

Published : 30 Oct 2025 05:45 PM
Last Updated : 30 Oct 2025 05:45 PM

ரஷ்ய எண்ணெய் மீதான அமெரிக்க தடை குறித்து இந்தியா ஆய்வு செய்கிறது: வெளியுறவு அமைச்சகம்

புதுடெல்லி: ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா சமீபத்தில் விதித்துள்ள தடைகள் குறித்து இந்தியா ஆய்வு செய்து வருகிறது என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரந்திர் ஜெய்ஸ்வால், "ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் சமீபத்திய தடைகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே எங்கள் முடிவுகள் இருப்பது வழக்கம். எரிசக்தி குறித்த கேள்விக்கான எங்கள் பதில் மற்றும் நிலைப்பாடு நன்கு அறியப்பட்டதாகும். எங்கள் 140 கோடி மக்களின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்ப அவற்றை மலிவு விலையில் பெற வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

ஈரானின் சபாஹர் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்கத் தடைகளுக்கு 6 மாத காலத்துக்கு இந்தியா விலக்கு பெற்றுள்ளது. அமெரிக்கா உடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாங்கள் தொடர்ந்து இதில் ஈடுபட்டு வருகிறோம்.

சில இந்திய நிறுவனங்கள் சீனாவிடம் இருந்து அரிய பூமி தாதுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான உரிமங்களைப் பெற்றுள்ளன. தற்போது அமெரிக்க அதிபர், சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இந்த பேச்சுவார்த்தைகள், களத்தில் எவ்வாறு செயல்பகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தியா - ஆப்கனிஸ்தான் கூட்டறிக்கையில் வலியுறுத்தியபடி, நீர்மின் திட்டங்கள் உட்பட அதன் நீர் மேலாண்மையில் ஆப்கனை ஆதரிக்க இந்தியா தயாராக உள்ளது. இன்று இந்தியா - ஆப்கனிஸ்தான் நட்பு அணை என்று அழைக்கப்படும் சல்மா அணை உட்பட 2 நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பின் வரலாறு உள்ளது.

பாகிஸ்தான் - ஆப்கனிஸ்தான் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, ஆப்கனிஸ்தான் தனது நாட்டின் இறையாண்மை மீது உறுதியாக இருப்பதை பாகிஸ்தான் ஏற்க மறுக்கிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை செயல்படுத்த தனக்கு உரிமை இருப்பதாக பாகிஸ்தான் கருதுகிறது. ஆனால், அதன் அண்டை நாடுகள் அதை ஏற்க மறுக்கின்றன. ஆப்கனிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, சுதந்திரத்துக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது.” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x