Published : 30 Oct 2025 04:40 PM 
 Last Updated : 30 Oct 2025 04:40 PM
பாட்னா: குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலை முன்பாக, அவரது பிறந்த நாளான நாளை (அக். 31) குடியரசு தின அணிவகுப்பைப் போன்று பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்படும் என்று அமித் ஷா அறிவித்துள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவை ஒன்றிணைப்பதில் சர்தார் வல்லபாய் படேல் பெரும் பங்கு வகித்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவரது பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதி, தேசிய ஒருமைப்பாட்டு நாளாக 2014 முதல் நாடு கொண்டாடி வருகிறது. குஜராத்தில் உள்ள கெவாடியா எனும் பகுதியில் சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரமுள்ள சிலை அமைக்கப்பட்டது. 2018ல் திறக்கப்பட்ட உலகின் மிக உயரமான இந்த சிலை, ஒற்றுமையின் சிலை ("Statue of Unity") என்று அழைக்கப்படுகிறது.

நாளை சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள். இதை முன்னிட்டு குஜராத்தின் கெவாடியாவில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு முன்பாக பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்பட இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பைப் போன்றே இந்த இந்த அணிவகுப்பு நடைபெறும். இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக். 31ம் தேதி இதேபோன்ற பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாளை நடைபெற உள்ள அணிவகுப்பில் காலை 7.55 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்காக அனைத்து மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் மாநில காவல்துறையினரை கவுரவிக்கும் வகையில் இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. இந்த அணிவகுப்பு சர்தார் வல்லபாய் படேலின் சிலை முன்பு நடைபெற உள்ளது. அணிவகுப்பின்போது, மத்திய ஆயுதக் காவல் படையினரும், மாநில காவல் படையினரும் தங்கள் திறமைகள், ஒழுக்கம் மற்றும் வீரத்தை வெளிப்படுத்துவர்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள், காவல் நிலையங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் #RunForUnity ஏற்பாடு செய்யப்படும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்காக உறுதிமொழி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏக்தா நகரில் ஒரு சிறப்பு தேசிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது நவம்பர் 1ம் தேதி முதல் பிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15-ம் தேதி வரை நடைபெறும். நவ.15-ம் தேதி பழங்குடியினரின் கலாச்சார நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவதோடு இது நிறைவடையும்.”என தெரிவித்தார்.
குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை முன்பாக இந்த ஆண்டு நடைபெற உள்ள அணிவகுப்பில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அசாம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர், கேரளா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி மாநிலங்களை சேர்ந்த 16 படையினர் பங்கேற்க இருக்கிறார்கள். ஆபரேஷன் சிந்தூரில் பதக்கம் வென்ற பிஎஸ்எப் வீரர்கள் 16 பேரும், சிஆர்பிஎப்-ல் இருந்து சவுர்ய சக்ரா விருது பெற்ற 5 பேரும் திறந்த ஜீப்பில் சவாரி செய்து அணிவகுப்பில் பங்கேற்க இருக்கிறார்கள். அணிவகுப்பில் ஒன்பது இசைக்குழுக்கள் தேசபக்தி பாடல்களை இசைக்கும். மேலும், நான்கு பள்ளி இசைக்குழுக்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
 
								
WRITE A COMMENT